தமிழ்நாடு

சாதிச் சான்றிதழ் பெற போராடும் மாணவியை தாக்கிய ஆதிக்க சாதியினர் : விழுப்புரம் அருகே கொடூரம்!

சாதிச் சான்றிதழ் பெறுவதற்காக 10 ஆண்டுகளாகப் போராடும் மாணவியை ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

விழுப்புரம் மாவட்டம், பரங்கினி இருளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவரது பெற்றோர் இருவருமே தினக்கூலிகளாகப் பணியாற்றுபவர்கள். 2018ம் ஆண்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 438 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றவர் தனலட்சுமி.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகளின்படி 354/600 மதிப்பெண் எடுத்து விழுப்புரம் மாவட்டம் புதுக்குப்பம் அரசினர் பள்ளியில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார்.

மருத்துவப் படிப்பை முடித்து மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும் என்பதே தனலட்சுமியின் விருப்பம். சாதிச் சான்றிதழ் இல்லாததால் கல்லூரியில் சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

2010ம் ஆண்டே விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியரிடமும், 2016ம் ஆண்டு அ.தி.மு.க எம்.எல்.ஏ எம்.சக்கரபாணியிடமும் சாதிச்சான்று வழங்கக் கோரி தனலட்சுமியின் தந்தை முனியாண்டி விண்ணப்பித்திருந்தார்.

ஆனால், தற்போது வரை சாதிச் சான்றிதழ் கிடைக்காத நிலையில் சமீபத்தில் சாதிச் சான்று பெறுவதற்காக 14 ஆதாரங்களின் நகல்களை இணைத்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு தனலட்சுமி கடிதம் ஒன்றினை எழுதினார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று, விழுப்புரம் வருவாய் கோட்ட அலுவலர் கே.ராஜேந்திரன் தலைமையிலான வருவாய் அதிகாரிகள் தனலட்சுமியின் விண்ணப்பம் குறித்து விசாரிக்க பரங்கினி கிராமத்திற்குச் சென்றபோது, வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தனலட்சுமியின் குடும்பத்தினர் ஒரு நாயக்கர் துணை சாதியைச் சேர்ந்தவர்கள் (MBC) என அதிகாரிகளிடம் கூறி அவர்களுக்கு எஸ்.டி சான்றிதழ் வழங்கக்கூடாது என அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

மேலும், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் நால்வர் தனலட்சுமியைத் தாக்கி அவரது குடும்பத்தையே கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். சாதிச் சான்றிதழ் பெறுவதற்காக போராடும் மாணவியை ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories