தமிழ்நாடு

கொரோனா பரிசோதனை முகாமில் மேளம் கொட்டி ஆடிய அமைச்சர் ஜெயக்குமார் : எரிச்சலடைந்த மாதவரம் மக்கள்!

சென்னை மாதவரத்தில் மருத்துவ முகாமை துவங்கி வைக்க வந்த அ.தி.மு.க அமைச்சர் மேளம் அடித்து ஆட்டம் போட்ட காட்சி அங்கிருந்தவர்களின் முகம் சுளிக்க வைத்தது.

கொரோனா பரிசோதனை முகாமில் மேளம் கொட்டி ஆடிய அமைச்சர் ஜெயக்குமார் : எரிச்சலடைந்த மாதவரம் மக்கள்!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னை மாதவரத்தில் மருத்துவ முகாமை துவங்கி வைக்க வந்த அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார் மேளம் அடித்து ஆட்டம் போட்ட காட்சி அங்கிருந்தவர்களின் முகம் சுளிக்க வைத்தது.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மாதவரம் மற்றும் ராயபுரம் மண்டலங்களுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார் இன்று மாதவரம் தண்டல் காலனி பகுதியில் கொரோனா பரிசோதனை மருத்துவ முகாமை துவங்கி வைக்க வருகை தந்தார்.

அப்போது அவரை வரவேற்கும் விதமாக மேளதாளங்கள் அ.தி.மு.க-வினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு வந்த அமைச்சர், மேளம் வாசிப்பவர்களோடு இணைந்து சிறிதுநேரம் மேளம் வாசித்து நடனமாடியது அங்கு பரிசோதனைக்காக வந்த பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.

கொரோனாவால் அச்சம் கொண்டுள்ள பொதுமக்கள் மத்தியில் சிறிதும் சமூக இடைவெளி இல்லாமலும், அமைச்சர் என்கிற பொறுப்பில்லாமலும் அமைச்சர் ஜெயக்குமார் மேளம் வாசித்து நடனமாடியது அங்கிருந்தவர்களிடையே அதிருப்தியை உண்டாக்கியது.

மாதவரம் மற்றும் ராயபுரம் மண்டலங்களில் சிறப்பு பார்வையாளராக அமைச்சர் ஜெயக்குமார் நியமிக்கப்பட்ட பிறகுதான் அப்பகுதிகளில் கொரோனா தொற்று பலமடங்கு வேகமாக அதிகரித்துள்ளது.

அமைச்சர் ஜெயக்குமாரின் தொகுதியிலுள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு போதிய சிகிச்சை இல்லாமலும் சரியான உணவு கிடைக்காமலும் இறந்தவர்களின் சடலங்களுக்கு நடுவே கொரோனாவுக்கு பயத்துடன் சிகிச்சை பெற்று வரும் கொடுமையும் நடக்கிறது.

கொரோனாவைத் தடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடாமல், இந்நேரத்திலும் மக்கள் மத்தியில் அலட்சியமாக நடந்துகொண்டு வருவது கண்டனங்களைச் சந்தித்து வருகிறது.

banner

Related Stories

Related Stories