தமிழ்நாடு

“இப்படி அப்பட்டமாகப் பொய் கூறினால் இந்த அரசு கூறுவதை மக்கள் எப்படி நம்புவார்கள்?” - மு.க.ஸ்டாலின் கேள்வி!

சென்னையில் மட்டும் 444 இறப்புகளை குறைவாக காட்டிய இந்த அரசு, பிற மாவட்டங்களிலும் இதேபோல் ஆயிரக்கணக்கான இறப்புகளை மறைத்திருக்க வாய்ப்புள்ளது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையை அ.தி.மு.க அரசு திட்டமிட்டு மறைப்பதாக தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், கடந்த மார்ச் 1 முதல் ஜூலை 10 வரை விடுபட்ட மரணங்களின் எண்ணிக்கை 444 ஆக கண்டறியப்பட்டுள்ளது எனவும், கொரோனாவால் இறந்தவர்களின் பட்டியலில் 444 பேர் சேர்க்கப்படும் என தமிழக அரசு சார்பில் நேற்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “எனது தொடர்ச்சியான அழுத்தத்திற்கு பின் கொரோனாவால் ஜூன் 10 வரை‘கணக்கில் வராமல்’ இறந்தவர்களின் எண்ணிக்கை 444 என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இதற்கு முன், ஜூன் 10 வரை தமிழகம் முழுவதும் இறந்தோரின் எண்ணிக்கை வெறும் 326 என்று மூன்றில் ஒரு பங்கு கணக்கை மட்டுமே காட்டினார்கள். இன்னும் எத்தனை அப்பாவி மக்களின் இறப்பினை மறைத்துள்ளீர்கள் பழனிசாமி?

சென்னையில் மட்டும் 444 இறப்புகளை குறைவாக காட்டிய இந்த அரசு, பிற மாவட்டங்களிலும் இதேபோல் ஆயிரக்கணக்கான இறப்புகளை மறைத்திருக்க வாய்ப்புள்ளது. இத்தகைய அப்பட்டமான பொய்களுக்கு பின்னர், இந்த அரசு கூறுவதை எல்லாம் மக்கள் எப்படி நம்புவார்கள்?

கணக்கிடத் தவறிய 444 என்பது வெறும் எண்ணிக்கை இல்லை; ஒவ்வொரு குடும்பத்தின் பேரிழப்பு. இதுவரை கணக்கிடப்படாத இறப்புகள் அனைத்தையும்

தமிழக முதல்வர் மொத்தமாக வெளியிட வேண்டும்.

பேரிடர் சூழலில் நேர்மையோடும் அறத்தோடும் செயல்படும் அரசே தேவை; மறைக்கும், மக்களை வஞ்சிக்கும் அரசு அல்ல! ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories