தமிழ்நாடு

“RBIன் கீழ் கூட்டுறவு வங்கிகள்: மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு தடை விதிக்க முடியாது” - ஐகோர்ட் மறுப்பு!

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

“RBIன் கீழ் கூட்டுறவு வங்கிகள்: மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு தடை விதிக்க முடியாது” - ஐகோர்ட் மறுப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பாக மத்திய அரசு, அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்கக் கோரியும், தமிழகத்தில் உள்ள நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இரு கூட்டுறவு வங்கிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல் முதலாக 1904 ம் ஆண்டு துவங்கப்பட்ட பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கி சார்பிலும், வெலூர் கூட்டுறவு நகர்புற வங்கி சார்பிலும் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கூட்டுறவு வங்கிகளைப் பொறுத்தவரை, மாநில அரசு சம்பந்தப்பட்டது என்பதால், அரசியல் சாசனத்தின்படி, நாடாளுமன்றத்திற்கு இதுசம்பந்தமாக சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

“RBIன் கீழ் கூட்டுறவு வங்கிகள்: மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு தடை விதிக்க முடியாது” - ஐகோர்ட் மறுப்பு!

அப்போது, கூட்டுறவு சங்கங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், இந்த அவசர சட்டம் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக மட்டுமல்லாமல், அரசியல் சாசனத்தின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளது என வாதிட்டார்.

ரிசர்வ் வங்கி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சோமயாஜி, நாடு முழுவதும் 1,937 கூட்டுறவு சங்கங்கள், 7.27 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு விவசாயிகளுக்கு கடன் வழங்கி, வங்கி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு வங்கியை ஒழுங்குபடுத்த ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதாக வாதிட்டார்.

இந்த வாதத்தையே மத்திய அரசு தலைமை வழக்கறிஞரும் முன்வைத்தார்.இந்த வழக்கில் இடைக்கால தடை கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் இன்று அறிவித்தது.

அதன்படி, மத்திய அரசின் அவசர சட்டத்தால் உடனடி தாக்கம் ஏதும் இல்லை எனவும், தற்போதைய நிலையில் கூட்டுறவு சங்கங்களின் உரிமைகளில் இந்த அவசர சட்டம் தலையிடுவதாக இருந்தால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியும் எனக் கூறி, தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

அதேசமயம், கூட்டுறவு சங்கங்களின் உரிமையில் தலையிடுவதாக அவசர சட்டம் இருந்தால் அதுபற்றி நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், கூட்டுறவு சங்கங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிட்டு, வழக்கை தள்ளிவைத்தனர்.

banner

Related Stories

Related Stories