தமிழ்நாடு

"நம்ம மேல பயம் இருக்கணும்" சிறிய பிரச்னைக்காக நடந்த கொடூர கொலை - ரவுடிகள் அட்டூழியம்

சென்னை ஆதம்பாக்கத்தில் பக்கத்து வீட்டுக்காரருடனான சிறிய தகராறு கொலையில் முடிந்திருக்கிறது

"நம்ம மேல பயம் இருக்கணும்" சிறிய பிரச்னைக்காக நடந்த கொடூர கொலை - ரவுடிகள் அட்டூழியம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கழிவுகளை சாலையில் கொட்டியதால் ஏற்பட்ட தகராறில் தட்டிக்கேட்டவரை வீடுபுகுந்து வெட்டிப் படுகொலை செய்த கும்பல் ; பிரபல ரவுடியின் கூட்டாளிகள் மக்களை அச்சுறுத்த செய்த வெறிச்செயல்?)

அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களோடு தகராறு ஏற்படுவது சகஜம் தான். ஆனால், அதுவே வெட்டிக் கொலை செய்யும் அளவுக்கு முன்விரோதமாக மாறியிருக்கிற சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 6வது பிரதான சாலையில் வசித்து வருபவர் அஞ்சலை தேவி. இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் குட்டி என்கிற குறலரசன் என்ற ஒரு மகன் இருக்கிறார். அதே தெருவில் வசித்து வருபவர் செல்வம். இவருக்கு மகன் வேலுமணி மற்றும் மருமகள் உள்ளனர். கடந்த வாரம் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்து அதன் கழிவுகளை சாலையில் கொட்டியிருக்கிறார் அஞ்சலை தேவி. இதனால் செல்வத்திற்கும் அஞ்சலை தேவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அஞ்சலையின் மகன் குறலரசன் செல்வத்தை பழி தீர்க்க நினைத்து திட்டம் போட்டிருக்கிறார். அதன்படி சம்பவத்தன்று குறலரசனுடன் இரு சக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் வீட்டிற்கு வெளியில் அமர்ந்திருந்த செல்வத்தை கத்தியால் கால், கை மற்றும் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

செல்வத்தின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது மகன் வேலுமணி, தந்தையை தாக்கிய அந்தக் கும்பலை தடுத்திருக்கிறார். ஆனால் பயங்கர ஆயுதங்களோடு இருந்த அந்த கும்பல் வேலுமணியையும் தாக்க முற்பட்டுள்ளனர். அதனால் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைப்பதற்குள், செல்வத்தை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது அந்தக் கும்பல்.

படுகாயமடைந்த செல்வத்தை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார் வேலுமணி. ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் செல்வத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். ஆதம்பாக்கம் போலிசார் கொலை செய்து விட்டு தப்பியோடிய நபர்களை தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், அஞ்சலை, அவரது மகன் குறலரசன், அவரது கூட்டாளிகள் சதீஷ், கோழிக்கால் ராஜேஷ் உள்பட நான்கு பேரும் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

இதில் குறலரசன் மீது ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்குகள், உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவன் பிரபல ரவுடி நாகூர் என்கிற நாகூர் மீரான் என்பவனின் முக்கிய கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 5 ஆண்டுகளாக ஆதம்பாக்கம், பரங்கிமலை, கே.கே.நகர், பள்ளிகரணை, ஆதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கொலை, கொள்ளை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வரும் தங்கள் மீதும் தன் கூட்டாளிகள் மீதும் பொது மக்களுக்கு பயம் வர வேண்டும் என்பதற்காக கூட இந்த கொலைச் சம்பவத்தை செய்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

banner

Related Stories

Related Stories