தமிழ்நாடு

“கிராமங்களிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்தால் என்ன செய்வீர்கள்?”- அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

கொரோனா நோய் குறித்து '32 தகவல்கள்' கோரி மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் மனுக்களைக் கொடுக்குமாறு தி.மு.க மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

“கிராமங்களிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்தால் என்ன செய்வீர்கள்?”- அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

"சென்னையில் கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்க முடியாமல் 'பல்வேறு குழுக்களைப் போட்டு' 'அதிகாரிகளுக்குள்ளும் அமைச்சர்களுக்குள்ளும் பனிப்போர் ஏற்படுத்தி' தடுமாறி நிற்பது போன்ற நிலை, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உருவானால் மக்களுக்குப் பேராபத்தை ஏற்படுத்திவிடும் விடும் என்பதை முதலமைச்சர் உணர வேண்டும்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :

"தமிழக அரசு, மக்கள் நல்வாழ்வுத் துறையின் 2.7.2020 செய்திக்குறிப்பில், 'கொரனோ நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை' இந்த நோயின் அலை நமது கிராமங்களில் வீசத் தொடங்கியிருப்பதைக் காட்டுகிறது. தமிழ்நாடு முழுவதும் நோய்த் தொற்றுக்குள்ளான நேற்றைய எண்ணிக்கை 4,343 பேர். அதில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள்- அதாவது 2,322 பேர், சென்னை தவிரப் பிற மாவட்டங்களில் இந்த நோய்க்குள்ளாகியிருக்கிறார்கள் என்பது மிகுந்த அதிர்ச்சியும் கவலையுமளிக்கிறது. நேற்று 57 பேர் இறந்ததில், 35 பேர் வெளிமாவட்டங்களில் உள்ளவர்கள் என்ற அரசின் புள்ளிவிவரம் தமிழ்நாட்டில் “சமூகப் பரவல்” இல்லை என்று அமைச்சரும், முதலமைச்சருமே, மருத்துவ விஞ்ஞானிகள் போல் மாறி மாறி பேட்டியளித்து 'நோய்த் தடுப்பு முயற்சிக்கான' காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.

'19 பேருக்கு வந்த நோய்த் தொற்றுக்கு யார் காரணம்' என்று கண்டுபிடிக்க முடியாத சூழலிலேயே, கேரளாவில் சமூகப் பரவல் என்று செய்திகள் வருகின்ற நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கரும், முதலமைச்சர் பழனிசாமியும் 'நோய்த் தொற்று நிபுணர்கள் மட்டுமே அடங்கிய' ஒரு குழுவினைக் கூட அமைக்காமல் இவர்களாகவே “சமூகப் பரவல் இல்லை” என்று 'சான்றிதழ்' அளித்து, மக்களை அபாயத்தில் தள்ளி வருகிறார்கள்.

மருத்துவ விற்பன்னர்கள், ஏப்ரல் முதற்கொண்டே தமிழகத்தில் சமூகப் பரவல் என்பதை எடுத்துச் சொல்லி, எச்சரிக்கை செய்து வருகிறார்கள். சென்னை தவிரப் பிற தமிழக மாவட்டங்களில் ஜூன் 1-ம் தேதியன்று கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 7,725 பேர். ஆனால் ஜூலை 2-ம் தேதி இந்த எண்ணிக்கை, 25 ஆயிரத்து 794 ஆக அதிகரித்து- ஏறக்குறைய நான்கு மடங்கைத் தொடும் நிலைக்கு வந்து விட்டது. அப்போது வெளிமாவட்டங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை, 46 ஆக இருந்தது, இன்றைக்கு 357 ஆக உயர்ந்து- 7 மடங்கைத் தாண்டி விட்டது. கொரோனா சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 2688 ஆக இருந்தது- இன்றைக்கு 28 ஆயிரத்து 361 ஆகி- ஏறக்குறைய 10 மடங்கைத் தாண்டி விட்டது.

“கிராமங்களிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்தால் என்ன செய்வீர்கள்?”- அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

கிராமப்புறங்கள் அடங்கிய தமிழகத்தின் பிற மாவட்டங்களில், இந்த நோய் மிக மோசமாகப் பரவி வருகின்றது என்பதை அரசின் புள்ளிவிவரங்களே சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கிறது.

இதுபோன்ற தருணத்தில் “கொரோனாவை எதிர்கொள்ளக் கிராமங்கள் தயாரா” என்று இன்று 'இந்து தமிழ் திசை' நாளிதழில் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மருத்துவப் பேராசிரியர்கள் எம்.எஸ்.சேஷாத்திரி, டி.ஜேக்கப் ஜான் ஆகியோர் எழுதியுள்ள தெளிவான கட்டுரையை அ.தி.மு.க அரசு உதாசீனப்படுத்தாமல், உண்மையான அக்கறையுடன் உற்றுக் கவனிக்க வேண்டும். 'எதுவுமே நடக்காதது போல்' 'எல்லாமே நாங்கள் முறையாகச் செய்கிறோம்' என்று, ஒரு மணல் கோட்டையைக் கட்ட இனியும் இந்த அரசு நினைக்கக் கூடாது.

அக்கட்டுரையில், 'பொதுப் போக்குவரத்துகள் தொடங்கப்பட்டு, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, நோயால் பெரும் பாதிப்புக்குள்ளான நகரங்களில் இருந்து மக்கள் கிராமங்களுக்குச் செல்கிறார்கள்' என்பதைச் சுட்டிக்காட்டி இந்த நோயை எதிர்கொள்ளக் கிராமங்களைத் தாமதமின்றித் தயார்ப்படுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளனர். நகர்ப்புறங்களில் வீசிய கொரோனா 'அபாய அலை' – கிராமப்புறங்களில் வீசத் தொடங்கி விட்டது என்பதைத்தான் அ.தி.மு.க அரசின் செய்திக் குறிப்பு தெளிவுபடுத்துகிறது.

ஆகவே, கிராமங்களில் தொடங்கியுள்ள 'கொரோனா அலை' பற்றி எதுவுமே தெரியாதது போல், மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத் தலைவரான பழனிசாமி இன்னும் இருப்பது கண்டனத்திற்குரியது.

தமிழகத்தின் 37 மாவட்டங்களில் நோய் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள முதல் ஐந்து மாவட்டங்களாகச் செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் இருக்கின்றன. 1,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களில், முதலமைச்சரின் சேலம் மாவட்டம் இருக்கிறது.

“கிராமங்களிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்தால் என்ன செய்வீர்கள்?”- அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-

கிராமங்களில் இப்படியொரு அபாயகரமான சூழல் உருவாகி விடக்கூடாது என்பதற்காகவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மாவட்ட வாரியாக கொரோனா பரிசோதனை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை, நோய்க்கு உள்ளானோரின் மருத்துவமனை வாரியான எண்ணிக்கை, கொரோனா நோய்ப் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, இறந்தோரின் எண்ணிக்கை, பெரும் பாதிப்பிற்குள்ளான நகரங்களில் இருந்து மாவட்டங்களுக்குச் சென்றோரின் எண்ணிக்கை, மருத்துவமனை வாரியாக கொரோனா நோய்த் தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கழக மாவட்டச் செயலாளர்கள் கேட்டார்கள். அதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. ஆகவே, இன்றைக்கு மீண்டும் கழக மாவட்டச் செயலாளர்களை கொரோனா நோய் குறித்து '32 தகவல்கள்' கோரி மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் மனுக்களைக் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்.

இந்நிலையில் மற்ற மாவட்டங்களில்- குறிப்பாக, மருத்துவக் கட்டமைப்பு பெருமளவில் இல்லாத கிராமங்களில் கொரோனாவை எதிர்கொள்ளத் தேவையான விழிப்புணர்வினை மக்கள் மத்தியில் உடனடியாக அ.தி.மு.க அரசு ஏற்படுத்திட வேண்டும். கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்துவது, கொரோனா நோய்க்கு உள்ளானோருக்குச் சிகிச்சை அளிக்கப் படுக்கை வசதிகளை அதிகரிப்பது, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் நோய் குறித்துத் தொடர் விசாரணை மேற்கொண்டு முறைப்படியான மருத்துவ உதவிகளைச் செய்வது, வென்ட்டிலேட்டர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது, அறிகுறி அல்லது அறிகுறி இல்லாத நோய்த் தொற்றாளர்களை கண்டுபிடிக்கத் தீவிர பரிசோதனையை முடுக்கி விடுவது, கொரோனா முன்கள வீரர்களுக்குத் தேவையான சுய மருத்துவ உபகரணங்கள், முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற அவசரகாலப் பணிகளில் இனியும் காலதாமதம் செய்யாமல் அ.தி.மு.க அரசு ஈடுபட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

சென்னையில் கட்டுக்கடங்காமல் போகும் கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்க முடியாமல் 'பல்வேறு குழுக்களைப் போட்டு' 'அதிகாரிகளுக்குள்ளும் அமைச்சர்களுக்குள்ளும் பனிப்போர் ஏற்படுத்தி' தடுமாறி நிற்பது போன்ற நிலை, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உருவானால் மக்களுக்குப் பேராபத்தை ஏற்படுத்திவிடும் விடும் என்பதை முதலமைச்சர் உணர வேண்டும். ஆகவே, தமிழகத்தின் கிராமப்புறங்களில் தீவிரமாகப் பரவும் கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்க- கண்டுபிடிக்க- சிகிச்சையளிக்க விரிவான- ஆக்கபூர்வமான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டிட வேண்டும் என்றும்- மக்களுக்கு விழிப்புணர்வு- தேவையான மருத்துவக் கட்டமைப்பு - முன்னணி கள வீரர்களுக்குப் பாதுகாப்பு ஆகிய முக்கியமான மூன்றையும் உறுதி செய்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். “நோய்த் தொற்றுப் பரவல் அதுவாகவே தணியட்டும்; அப்போது நம்மால்தான் தடுக்கப்பட்டுத் தணிந்தது, குறைந்தது என்று புகுந்து பெயர் எடுத்துக் கொள்ளலாம்” என நினைத்து; உடனடியாகத் திட்டமிட்டு எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் இருந்தால், ஆபத்தான கட்டத்தை அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல முடியாது என்பதை உணர வேண்டும். இதை நான் விடுக்கும் எச்சரிக்கையாகக் கொண்டு, மக்களைக் காப்பாற்ற அரசு முன்வர வேண்டும் என விரும்புகிறேன்.”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories