தமிழ்நாடு

"2015 வெள்ளத்தின்போது மொத்த சென்னைக்கும் உதவினார் ஜெ.அன்பழகன்” - நெகிழ்ந்து பாராட்டிய தன்னார்வ அமைப்பு!

தன்னார்வ அமைப்பினர் மறைந்த தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் பணிகளை வியந்து நினைவுகூர்ந்துள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமான நிகழ்வு தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் கடைகோடித் தொண்டர்கள் வரை பெரும்துயரை ஏற்படுத்தியுள்ளது.

62 வயதான ஜெ.அன்பழகன் தி.மு.க. சார்பில் 3 முறை சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏவாக சட்டமன்றத்தில் பங்குபெற்றவர். சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தவர்.

மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும், மக்கள் நலன் காக்கவும் தி.மு.க. சார்பில் நடந்த அத்தனை போராட்டங்களிலும் முன்னின்று நடத்தி கழகத்திற்காக உழைத்தவர் ஜெ.அன்பழகன். அ.தி.மு.க அரசின் அவலங்களை சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் துணிச்சலுடன் சுட்டிக்காட்டியவர்.

கொரோனா பேரிடர் காலத்தில் களத்தில் நின்று மக்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்திட்ட மக்கள் தொண்டனை கொரோனா விழுங்கியிருக்கிறது. கொரோனா காலமென்றில்லாமல் மக்கள் துயருற்ற எல்லாக் காலங்களிலும் அவர்களுக்கு உதவுவதையே பெரும் கடமையாகச் செய்தவர் ஜெ.அன்பழகன்.

‘சென்னையில் ஒரு மழைக்காலம்’ (COMK) எனும் தன்னார்வ அமைப்பு தட்பவெப்ப நிலை குறித்த தகவல்களை உடனுக்குடன் மக்களுக்கு அளித்து வருகிறது. 2015ம் ஆண்டு சென்னை வெள்ள காலத்தில் நிவாரணப் பணிகளில் திறம்படப் பணியாற்றிய அமைப்பு இது. இந்த அமைப்பினர் ஜெ.அன்பழகனின் பணிகளை வியந்து நினைவுகூர்ந்துள்ளனர்.

இதுதொடர்பாக COMK இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எங்கள் பக்கத்தை ட்விட்டரில் பின்தொடர்ந்த முதல் எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் அவர்களாகத்தான் இருக்கும். 2015 சென்னை வெள்ளத்தின்போது, எங்களுக்கு வந்த உதவிக் கோரிக்கைகள் பலவற்றை அவருக்கு அனுப்பினோம். அவர் தனது பகுதிக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சென்னை நகரத்துக்கும் உதவினார்” என நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories