தமிழ்நாடு

பதில் கிடைக்காத கடிதத்தால் என்ன பயன் முதல்வரே? இது தமிழக மக்களுக்கு அவமானம்.. - சு.வெங்கடேசன் எம்.பி!

மத்திய அரசை விமர்சித்துள்ள சு.வெங்கடேசன் முதலமைச்சர் ஒருவரின் கடிதத்துக்கு பதில் அனுப்பாமல் இருப்பது தமிழக மக்களுக்கு அவமானம் என தெரிவித்துள்ளார்.

பதில் கிடைக்காத கடிதத்தால் என்ன பயன் முதல்வரே? இது தமிழக மக்களுக்கு அவமானம்.. - சு.வெங்கடேசன் எம்.பி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மாநிலங்களுக்கு கூடுதல் கடன் வேண்டுமென்றால் விவசாயிகள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சார சேவையை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு நாடெங்கிலும் உள்ள எதிர்க்கட்சிகள், பல்வேறு மாநில அரசுகள் மத்தியில் எதிர்ப்புகள் வலுத்துள்ளன.

அவ்வகையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இந்த விவகாரம் தொடர்பாக கண்டனம் தெரிவிக்காமல் பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதற்கு பதிலே வராத கடிதங்களால் என்ன பயன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் மதுரை நாடாளுமன்றத் தொகுதி எம்.பி சு.வெங்கடேசன்.

இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள பதிவின் விவரம்:-

மாநில அரசுகளின் கடன் வாங்குவதற்கான வரம்பை மாநில உள் உற்பத்தி மதிப்பில் 3 % லிருந்து 5 % ஆக உயர்த்தியுள்ள மத்திய அரசு அதற்கு விதித்துள்ள நிபந்தனைகளுக்கு எதிராக கடிதம் எழுதியிருக்கிறீர்கள்.

உங்கள் கடிதத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை நிறுத்துமாறு நிபந்தனை போடுவதை தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பதாக கூறியிருக்கிறீர்கள். இப்படி நிபந்தனை போடுவது கோவிட்-19 நெருக்கடியை எதிர்கொள்ள தேவையான அத்தியாவசிய செலவுகளுக்கு நிதி கிடைப்பதை தடுத்து விடும் என்றும், இது பரஸ்பர ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி முறைமைக்கு உகந்ததல்ல என்றும், அரசியல் சட்டப்பிரிவு 293 (3) ஐ மத்திய அரசு நிபந்தனைகள் போட பயன்படுத்துவது இதுவரை இல்லாத ஒன்று எனவும், கருத்தொற்றுமை ஏற்படாத கொள்கை முடிவுகளை நிபந்தனையாக போடக் கூடாது எனவும் உங்கள் கடிதம் கூறுகிறது.

ஒரு பிரதமருக்கு மாநில முதல்வர் கடிதம் எழுதுவதில் தவறில்லை. ஆனால் மாநில முதல்வரின் கடிதத்திற்கு பதில் எழுதுகிற ஜனநாயக மாண்பு கொஞ்சமாவது மத்தியில் உள்ளவர்களுக்கு உண்டா? இதுவரை நீங்கள் எழுதிய கடிதங்கள் எத்தனை? வந்த பதில்கள் எத்தனை?

ஓர் முதல்வரின் கடிதத்திற்கு மறு மொழி கூறாமல் இருப்பது தமிழக மக்களுக்கு அவமானம்.

பதில் கிடைக்காத கடிதத்தால் என்ன பயன் முதல்வரே? இது தமிழக மக்களுக்கு அவமானம்.. - சு.வெங்கடேசன் எம்.பி!

முதல்வரே...

கடிதம் போதாது.
அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு எதிர்க் கட்சிகளை அழையுங்கள், இணையுங்கள்.

மற்ற மாநில அரசுகள் கருத்துக்களை இணைத்து கூட்டாட்சிக்கு விரோதம் என்ற குரலை வலுவாக எழுப்புங்கள்.

தமிழக எம்.பி க்கள் உறுதியாக தமிழக நலனுக்காக நிற்பார்கள். குரல் கொடுப்பார்கள்.

கடிதம் கண்டனமாக மாறாமல் பதில் வராது முதல்வரே...” என சு.வெங்கடேசன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories