தமிழ்நாடு

"ஊரடங்கு முடியும்வரை ‘டாஸ்மாக்’ கடைகளை திறக்கக்கூடாது” - சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு!

தமிழகத்தில் மதுபானக் கடைகளை மூடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

"ஊரடங்கு முடியும்வரை ‘டாஸ்மாக்’ கடைகளை திறக்கக்கூடாது” - சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் மூடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மதுக்கடைகளை திறக்க அனுமதித்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும், ஒருவருக்கு ஒரு பாட்டில் மட்டுமே வழங்க வேண்டும், மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் ஒருவருக்கு மது வழங்க வேண்டும், அதற்கு மதுபானம் வாங்குபவரின் ஆதார் எண்ணை பதிவு செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்திருந்தது.

இந்த நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற அரசுக்கு உத்தரவிடக் கோரி மக்கள் நீதி மையம் கட்சியின் பொதுச் செயலாளரும், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியுமான மவுரியா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், மதுபானத்துக்காக குடிமகன்கள் அண்டை மாநிலங்களுக்கு செல்லக்கூடும் என்பதால் டாஸ்மாக் கடைகளை திறப்பதாக அரசு கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை எனவும், ஊரடங்கு அமலில் உள்ளபோது அனுமதியின்றி அண்டை மாநிலங்களுக்கு செல்பவர்களை தடுக்கவேண்டியது அரசின் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் எனக் கூறி வரும் நிலையில், நோய் எதிர்ப்புச் சக்தியை குறைக்கும் மதுவை விற்க அனுமதிப்பது, நோய் பாதிப்பை அதிகரிக்கும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

அதேபோல வழக்கறிஞர் ஜி.ராஜேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் தற்போது டாஸ்மாக் கடைகள் திறந்து இருப்பதால் தனிமனித இடைவேளை பின்பற்றவில்லை. எனவே ஆன்லைன் மூலம் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.

குன்றத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் திலீபன் தாக்கல் செய்த வழக்கில் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் இதேபோல சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மூன்று வழக்கிலும் வழக்கிலும் மதுக்கடைகளை திறக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அமர்வு தமிழகத்தில் திறக்கப்பட்ட அனைத்து மதுபானக் கடைகளையும் ஊரடங்கு முடியும்வரை மூடுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் ஆன்லைன் மூலம் மட்டுமே விற்பனை செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது என வலியுறுத்தி தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், டாஸ்மாக் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டிருப்பது பொதுமக்களுக்கும், தாய்மார்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories