தமிழ்நாடு

"பெண் பஞ்சாயத்து தலைவரை மிரட்டும் அ.தி.மு.க நிர்வாகி" - முதல்வரின் மாவட்டத்தில் தலைவிரித்தாடும் சாதிவெறி!

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த அ.தி.மு.க நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்பத்தோடு தீக்குளிக்க போவதாக வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு.

"பெண் பஞ்சாயத்து தலைவரை மிரட்டும் அ.தி.மு.க நிர்வாகி" - முதல்வரின் மாவட்டத்தில் தலைவிரித்தாடும் சாதிவெறி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் பஞ்சாயத்து தலைவரை மக்கள் பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த அ.தி.மு.க நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்பத்தோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க போவதாக பஞ்சாயத்து தலைவரே வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோணகாபாடி ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அம்சவள்ளி. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவர் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் கணவரான அ.தி.மு.க நிர்வாகி மோகன் என்பவர் ஊராட்சி மன்ற அலுவலகத்திலேயே இவரை ஜாதி பெயரை சொல்லித் திட்டி தரக்குறைவாக பேசிச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இந்த ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் இலங்கை அகதிகள் முகாமிற்கு தண்ணீர் முறையாக வரவில்லை என்ற தகவல் அறிந்து ஊராட்சி மன்ற அதிகாரிகளுடன் தண்ணீர் பிரச்னை குறித்து நடவடிக்கை எடுக்க தனது கணவருடன் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்றுள்ளார் ஊராட்சி மன்றத் தலைவி அம்சவள்ளி.

அப்போது அங்கு வந்த அ.தி.மு.க நிர்வாகி மோகன் அவர்களை வழிமறித்து பணி செய்ய விடாமல் தடுத்ததோடு கடுமையான வார்த்தைகளால் சாதியைக் குறிப்பிட்டு தரக்குறைவாகப் பேசி அவமதித்ததாகவும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடமும் காவல்துறையினரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

குற்றச்சாட்டுக்குள்ளான மோகன் அ.தி.மு.க எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமானவர். சமீபத்தில் அவரது மகளின் திருமணத்திலும் பங்கேற்றார் எடப்பாடி பழனிசாமி. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பதால், நேற்று இரவு பெண் பஞ்சாயத்து தலைவர் அம்சவள்ளி, அ.தி.மு.க நிர்வாகி மோகன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"பெண் பஞ்சாயத்து தலைவரை மிரட்டும் அ.தி.மு.க நிர்வாகி" - முதல்வரின் மாவட்டத்தில் தலைவிரித்தாடும் சாதிவெறி!

மேலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தன்னை ஊராட்சி மன்றத்தில் எந்தப் பணியும் செய்ய விடாமல் தடுத்து வருவதாகவும் மோகன் மீது குற்றம்சாட்டியுள்ளார். தமிழக முதலமைச்சரின் சொந்த மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் பஞ்சாயத்து தலைவருக்கு நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம் சேலம் மாவட்டத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories