தமிழ்நாடு

“வெறும் மன்னிப்பு பசித்த வயிற்றை நிரப்பாது” ரூ.1,000 கோடி கூலி பாக்கியை உடனே வழங்குக - சு.வெங்கடேசன் !

தமிழகக் கிராம உழைப்பாளி மக்களுக்கு நிலுவையாக உள்ள ரூ.1000 கோடியை காலம் தாழ்த்தாமல் வழங்குமாறும் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மத்திய அரசுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக கிராமப்புற மக்களின் கூலிபாக்கி 1000 கோடியை உடனே வழங்குமாறு மத்திய கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு மதுரை மக்களவைத் தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, “கோவிட்-19, இந்தியா முழுமையும் கிராமப்புற உழைப்பாளி மக்களின் வாழ்க்கையைத் தலைகுப்புறப் புரட்டிப்போட்டிருக்கிற வேளை இது. கடும் நெருக்கடி மூழ்கடிக்கிற நிலையிலும் கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் குரூரமான வஞ்சனைக்கு உள்ளாக்கப்படுவதை அதிர்ச்சியோடும் அக்கறையோடும் உங்களின் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.

இரண்டு நாட்களாக இந்தியா முழுவதும் நகர்ப்புற அமைப்புசாரா புலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கிற அவலங்கள் எல்லோரையும் உலுக்கிக் கொண்டிருக்கின்றன. அரசின் எந்த அறிவிப்பும் நிவாரணமும் எட்டாத நிலையில் அவர்கள் பல்லாயிரக்கணக்கில் பல நூறு கிலோ மீட்டர்களைக் கடந்து சொந்த மாநிலங்களுக்கு, சொந்த ஊர்களுக்குக் கால்நடையாகவே திரும்புகிற துயரத்தை நாடு கண்டு வருகிறது. இப்பின்புலத்தில் இந்திய பிரதமரோ, " என்னை மன்னித்துவிடுங்கள்" என்று பேசவேண்டிய நிலை ஏற்பட்டது.

“வெறும் மன்னிப்பு  பசித்த வயிற்றை நிரப்பாது”  ரூ.1,000 கோடி கூலி பாக்கியை உடனே வழங்குக - சு.வெங்கடேசன் !

ஆனால் இதே நிலைமை கிராமப்புற உழைப்பாளி மக்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. வாழ்வாதாரத்திற்கான எல்லா வழிகளும் அடைபட்டுள்ள சூழலில் மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டத்தின் கூலி இரண்டரை மாதங்களாக வழங்கப்படவில்லை என்பது அநீதி அல்லவா? தமிழகத்தில் ஜனவரி 13ஆம் நாளிலிருந்து அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கூலிபாக்கி ரூ 671 கோடி; பொருளாகத் தரவேண்டிய பாக்கி ரூ 300 கோடி. மொத்தம் ரூபாய் 1000 கோடியைத் தொடுகிறது. இதுநாள் வரை மத்திய அரசிடமிருந்து இதற்கான நிதி வந்து சேரவில்லை.

ஒரு புறம் நாள்கூலி ரூ.20 உயரும் என்ற அறிவிப்பு. மறுபக்கம் செய்த வேலைக்கு கூலி இரண்டரை மாத பாக்கி என்பது வேதனையான முரண் அல்லவா? வேலை அட்டை வைத்திருப்பவர்களில் 7 சதவீதம் பேருக்கே 100 நாள்களும் வேலை கிடைக்கிறது என்ற வழக்கமாக உள்ள வஞ்சனை.

“வெறும் மன்னிப்பு  பசித்த வயிற்றை நிரப்பாது”  ரூ.1,000 கோடி கூலி பாக்கியை உடனே வழங்குக - சு.வெங்கடேசன் !

தற்போது இவ்வளவு நெருக்கடி மிக்க காலத்திலும் கூலிபாக்கிக்கு அவர்களை அல்லாடவிடுவது மிகக்கொடூரம் அல்லவா? இதற்காக ஓர் மன்னிப்பை இந்திய பிரதமர் கேட்கிற நிலைமை வரக்கூடாது எனக் கருதுகிறேன். வெறும் வார்த்தைகள் போதாது. அவற்றால் பசித்த வயிறு நிரம்பாது.

உங்களின் உடனடிக் கவனம் தேவைப்படுகிற பிரச்சினை இது. ஏழை, எளிய மக்களின் உயிர்வாழ்கிற உரிமை குறித்த ஒன்று. தமிழகக் கிராம உழைப்பாளி மக்களுக்கு நிலுவையாக உள்ள ரூ.1000 கோடியை இனியும் காலவிரயம் இன்றி உடனே அனுப்பிவைத்து கிராமப்புற உழைப்பாளி மக்களுக்கு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன் என மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories