தமிழ்நாடு

"சென்னையில் துப்புரவு பணியாளரான M.Sc படித்த பெண் : மோசமாக அதிகரிக்கும் வேலையின்மை" - ஆ.ராசா ஆவேசம்!

நாட்டில், பட்டதாரிகளுக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கு சற்றும் பொருந்தாத, துப்புரவு வேலைகளில் பணியமர்த்தப்படும் சம்பவங்கள் நிலவுவதாக மக்களவையில் தி.மு.க கொறடா ஆ.ராசா குற்றஞ்சாட்டினார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தவறான பொருளாதார கொள்கைகளான பணமதிப்பு நீக்கத்தாலும், ஜி.எஸ்.டி போன்றவற்றாலும் நாட்டில் பொருளாதார நிலை மிகவும் மந்தமாக உள்ளது. இதனால் நாட்டின் வளர்ச்சி வரலாறு காணாத வகையில் சரிவைச் சந்தித்ததோடு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்துள்ளது என புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் வேலையில்லாத் திண்டாட்டம் 7.78 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதேபோல், கிராமப்புறங்களில் 5.97 சதவிகிதத்தில் இருந்த வேலையில்லா திண்டாட்டம் பிப்ரவரி மாதத்தில் 7.37 சதவிகிதமாகவும், நகர்ப்புறங்களில் 9.70 சதவிகிதத்தில் இருந்த 8.65 சதவிகிதமாகவும் குறைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் மத்திய பா.ஜ.க அரசோ, நாட்டில் பொருளாதார சரிவே ஏற்படவில்லை. 2020-ல் பெரும் வேலைவாய்ப்பு உருவாகும் என உண்மையை மறைத்து பொய் பிரசாரங்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறது.

இந்நிலையில், நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, வேலையின்மை பற்றி மக்களவை தி.மு.க கொறடா ஆ.ராசா எம்.பி கேள்வி எழுப்பினார். அப்போது, கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் வேலையில்லாத திண்டாட்டம் அதிகரித்திருப்பதாக கூறிய அவர், நகர மற்றும் கிராமப்புறங்களில் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி திண்டாடுவதாகவும் தெரிவித்தார்.

இதேபோல, பட்டதாரிகளுக்கு அவர்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததுடன், பள்ளிப்படிப்பை தகுதியாக கொண்ட மிகவும் கீழ்நிலை வேலைகளை, தமிழகம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் வழங்குவது சமூகத்திற்கு மிகப்பெரிய களங்கம் என ஆ.ராசா வேதனை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சென்னை பல்கலைக்கழகத்தில் கணிதப் படிப்பில் முதுகலை பட்டம் பெற்ற பட்டதாரி பெண் ஒருவர் சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியமர்த்தப்பட்டிருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் சப்தோஷ்குமார் கங்வார், வேலைவாய்ப்பை பெருக்க திறன் மேம்பாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். அதிகம் படித்தவர்கள் கல்வித்தகுதியை குறைத்து விண்ணப்பிப்பதால், இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாகவும் மத்திய இணையமைச்சர் கூறினார்.

banner

Related Stories

Related Stories