தமிழ்நாடு

“அனைத்துக் கட்சியினருடனும் இணக்கமாக பழகக்கூடியவர் பேராசிரியர்” : கே.பாலகிருஷ்ணன் இரங்கல்!

“அனைத்துக் கட்சியினருடனும் இணக்கமாக பழகக்கூடியவர். எந்த சூழ்நிலையிலும் பதற்றமில்லாமல் நிதானத்தை கடைபிடிப்பவர்” எனக் குறிப்பிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.

“அனைத்துக் கட்சியினருடனும் இணக்கமாக பழகக்கூடியவர் பேராசிரியர்” : கே.பாலகிருஷ்ணன் இரங்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு காலமானார். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மறைந்த பேராசிரியர் க.அன்பழகன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது திராவிட இயக்க கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோருடன் இணைந்து வாழ்நாள் முழுவதும் பணியாற்றியவர். பகுத்தறிவு மற்றும் திராவிடக் கொள்கையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்.

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம், அவசரகால நிலை எதிர்ப்பு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர். பலமுறை சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழக அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் சிறப்பாகப் பணியாற்றியவர். சிறந்த பேச்சாளர், ஆழ்ந்த சிந்தனையாளர். பன்முக எழுத்தாளர் என்ற பெருமிதங்களை கொண்டவர். அனைத்துக் கட்சியினருடனும் இணக்கமாக பழகக் கூடியவர். எந்த சூழ்நிலையிலும் பதற்றமில்லாமல் நிதானத்தைக் கடைபிடிப்பவர்.

இந்திய நாடு மதவெறி சக்திகளின் ஆட்சியின் கீழ் மதசார்பின்மை மாநில மற்றும் மொழி உரிமைகள் மீது தாக்குதலுக்கு உள்ளாகும் சூழ்நிலையில், இக்கொள்கைகளில் ஆழ்ந்த பிடிப்பு கொண்ட பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாததாகும். அவரது மறைவு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

அவரது மறைவால் துயருற்றிருக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், அன்னாரது குடும்பத்தாருக்கும், தி.மு.க தொண்டர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories