
தமிழக அரசியலில் ஆரியர்-திராவிடர் போராட்டம் மீண்டும் தொடங்கியுள்ளதாக திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
“2007 ஜனவரி 22 ஆம் நாள், சென்னை, கலைவாணர் அரங்கில், இனமானப் பேராசிரியர் அவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட இயக்கமே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை! 13 ஆண்டுகளை நிறைவு செய்து, 14 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இத்தருணத்தில், அன்பையும், தோழமையையும் அனைவருடனும் பகிர்ந்து மகிழ்கிறேன்.
கடந்த 13 ஆண்டுகளில், தொடக்க நாளிலிருந்து இன்றுவரையில் என்னுடன் சேர்ந்து பயணம் செய்யும் தோழர்கள், இடையில் பிரிந்தோர், புதிதாய் வந்தோர் என்று பலர் உண்டு. அனைவருக்கும் என் அன்பும், நன்றியும்!

பேரவை தொடர்பான என் அனுபவங்கள் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டியவைதாம் என்றாலும், இந்தப் பதிவு அதற்கானதில்லை. பேரவை என்பது, சமூகத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டதுதான். எனவே அதனைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதை விட, நம் தமிழ்ச் சமூகம் குறித்த என்னைப் போன்றோரின் கவனம், கவலை ஆகியன குறித்து அனைவருடனும் என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவே இதனைப் பதிவிடுகிறேன்.
ஒரு நூற்றாண்டிற்கு முன் தமிழகத்தில் எழுந்த சிந்தனை மாற்றம், ஆதிக்க சக்தியாய் இருந்த பார்ப்பனர்களை வீழ்த்தி, அனைவருக்குமான ஜனநாயகத் தளத்தினை ஏற்படுத்த முயன்றது. அதில் பேரளவு வெற்றியும் பெற்றது. சமூகத்தில் மட்டுமின்றி, அரசியல், ஆட்சி அதிகாரத்திலும் அது இடம்பெற்றதால், அதன் அடித்தளம் வலிமையாக உள்ளது.
இந்திய அரசியலுக்கும், தமிழக அரசியலுக்கும் இடையே எப்போதும் ஒரு அழுத்தமான வேறுபாடு உண்டு. மத அடிப்படையில் வடநாட்டில் அரசியல் நடத்துவது எளிது. பலமுறை அவ்வாறுதான் நடந்துள்ளது.

ஆனால் தமிழ்நாட்டில், சென்ற நூற்றாண்டின் தொடக்கம் தொடங்கி, பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதோர் அரசியலே முதன்மை பெற்றுள்ளது. அதனையே ஆரிய-திராவிடப் போராட்ட அரசியல் என்றும் கூறுகின்றோம். அதன் காரணமாகவே, இந்தியாவின் பல இடங்களில் செல்வாக்குடன் இருந்தாலும், தமிழகத்தில் பா.ஜ.கவால் காலூன்ற முடியவில்லை.
அந்தத் திராவிட இயக்க அடித்தளத்தைத் தகர்க்கும் முயற்சியில் இப்போது நம் கருத்து எதிரிகள் இறங்கிவிட்டனர். அதற்குப் பல கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். அந்தக் கருவிகளில் ஒன்றுதான் ஆரிய-திராவிடப் போர் என்பதைத் தமிழ்த் தேசியர் என்று சொல்லிக்கொள்வோரைக் கொண்டு தமிழ்-திராவிடம் என்னும் புதிய எதிர்வுகளை உருவாக்க முயல்வது. இப்போது அவர்கள் கையாளத் தொடங்கியிருக்கும் இன்னொரு புதிய கருவியின் பெயர் ரஜினிகாந்த்.
ரஜினியின் மூலம், இந்துக்களுக்கு எதிரானது திராவிட இயக்கம் என்னும் சிந்தனையை மீண்டும் விதைக்க முயல்கின்றனர். இந்த நாட்டில், இந்துக்களுக்கு எதிராகத் திராவிட இயக்கம் மட்டுமில்லை, பிற மதத்தினரும் நடந்து கொண்டதில்லை. இந்துக்கள் எனப்படுவோரை இழிவு படுத்தியவர்கள், படிக்கக்கூடாது என்று தடுத்தவர்கள், அவர்களின் திருமணம், துக்கம் உள்பட எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தியவர்கள் பார்ப்பனர்கள்தாம்!

எனவே இந்துக்களுக்கு எதிரானவர்கள் பார்ப்பனர்கள் - பார்ப்பனர்கள் மட்டுமே! இந்த உண்மையை நாம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். பா.ஜ.கவில் இருக்கும் மற்றவர்களைக் கூடத் தவிர்த்துவிட்டு, பாபர்ப்பனர்களைத் தனிமைப்படுத்த வேண்டும். அவர்கள் மட்டுமே அத்தனை அழிவிற்கும், இழிவிற்கும் காரணம் என்பதைத் தொடர்ந்து மக்களிடம் பரப்புரை செய்ய வேண்டும்.
வேறுவேறு தளத்தில் இருந்தாலும், ஹெச்.ராஜா, குருமூர்த்தி, ரங்கராஜ் பாண்டே போன்ற அனைவரும் ஒரே குரலில் இன்று பேசுவதை மக்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டும்.
பார்ப்பனர்-பார்ப்பனர் அல்லாதோர் அதாவது ஆரியர் - திராவிடர் போராட்டமே தமிழக அரசியல் என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். ஆம், தமிழக அரசியல் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து நிற்கிறது! ” என சுப.வீரபாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.








