தமிழ்நாடு

"தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டு பணிகளை நிறுத்திவைக்க வேண்டும்” - முதல்வருக்கு சி.பி.எம் கடிதம்!

தமிழகத்தில் தேசிய மக்கட்தொகை பதிவேட்டு பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார்.

"தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டு பணிகளை நிறுத்திவைக்க வேண்டும்” - முதல்வருக்கு சி.பி.எம் கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு முடிந்ததால் தேசிய குடிமக்கள் ஆவணம் தானாகவே உருவாக்கப்படும். எனவே தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டு பணிகளை நிறுத்தி வைக்கவேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மத்திய அரசு கொண்டுவர இருக்கின்ற தேசிய குடிமக்கள் ஆவணம் (என்.ஆர்.சி) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.), அதன் காரணமாக இந்திய குடிமக்களுக்கு ஏற்படக் கூடிய இழப்பு, அதனால் நாடு முழுவதும் ஏற்படவிருக்கிற சமூக பதற்றம் ஆகியவை குறித்து பல்வேறு தரப்பினரும் எச்சரித்திருந்தனர்.

இந்த எச்சரிக்கையை உறுதிப்படுத்துகின்ற வகையில் இப்போது தேசிய மக்கள் பதிவேட்டிற்கான பணிகளுக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. தேசிய குடிமக்கள் ஆவணத்தை நிறைவேற்றுவதற்கு புதிய சட்டங்கள் எதையும் இயற்ற வேண்டியதில்லை என்பதும், மக்கள் பதிவேட்டிற்கான பணிகள் முடிந்துவிட்டால் தேசிய குடிமக்கள் ஆவணம், அதன் தொடர்ச்சியாகவே தயாராகிவிடும் என்பதும், அதற்கு வேறு எந்த தடையும் இல்லை என்பதும் தாங்கள் அறிந்ததே.

"தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டு பணிகளை நிறுத்திவைக்க வேண்டும்” - முதல்வருக்கு சி.பி.எம் கடிதம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த பல்வேறு மாநில கட்சிகளும் தங்கள் மாநிலத்தில், தேசிய குடிமக்கள் ஆவணத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளன. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளில் தங்கள் மாநிலத்தில் தொடங்க மாட்டோம் என கேரள அரசும், மேற்கு வங்க அரசும் அறிவித்துள்ளன. மேலும் பல மாநில அரசுகளும் அந்த மாநில மக்களின் உணர்வுகளை கணக்கில் கொண்டு இதே நிலையினை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டிலும் பொதுவான மக்கள் மத்தியில் கொந்தளிப்பான நிலைமை உருவாகியுள்ளது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடின்றி அனைத்து மக்களும் மத்திய அரசின் என்.பி.ஆர்., என்.ஆர்.சி ஆகியவைகளை கைவிட வேண்டுமென பகிரங்கமாக கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்திருந்தாலும் அ.தி.மு.கவும், தமிழக அரசும் ஆதரவு அளித்த இதர கட்சிகளைப் போல தேசிய குடிமக்கள் ஆவணம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவிக்க வேண்டுமென எதிர்பார்ப்பது இயல்பே.

மக்கட்தொகை பதிவேடு கணக்கெடுப்பு முடிந்துவிட்டால் தேசிய குடிமக்கள் ஆவணம் தானாகவே உருவாக்கப்பட்டுவிடும் என்கிற காரணத்தினால், தேசத்தின் நலன், சமூக நல்லிணக்கம், அரசியல் சட்டப் பாதுகாப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, கேரளா, மேற்குவங்க மாநில அரசாங்கங்களைப் போல தமிழக அரசும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டு பணிகளை நிறுத்தி வைக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories