தமிழ்நாடு

“சமஸ்கிருதத்துக்கு வக்காளத்து வாங்குவது தமிழ் வளர்ச்சித் துறையின் பணியல்ல” - இயக்குநர் கவுதமன் கண்டனம்!

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தியை பயிற்றுவிக்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு இயக்குநர் கவுதமன் கண்டனம் தெரிவித்துப் பேசியுள்ளார்.

“சமஸ்கிருதத்துக்கு வக்காளத்து வாங்குவது தமிழ் வளர்ச்சித் துறையின் பணியல்ல” - இயக்குநர் கவுதமன் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்கும் விதமாக மத்திய பா.ஜ.க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்பை அடுத்து அவ்வப்போது தன்னுடைய முடிவில் இருந்து பின்வாங்கி வருகிறது பா.ஜ.க அரசு.

ஆனால், தமிழகத்தில் அறிஞர் அண்ணாவின் பெயரில் கட்சியையும் ஆட்சியையும் நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசோ மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் அதற்கு உறுதுணையாக இருக்கும் வகையில் தமிழக மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளது.

அந்த வகையில், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழியை கற்பிப்பதற்காக நிதி ஒதுக்கி அதனை தொடங்கி வைத்தார் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன். அவரது இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழ் வளர்ச்சித்துறை தமிழ் அழிப்புத் துறையாகவே மாறிவிட்டதா என கடுமையாகச் சாடி கண்டனம் தெரிவித்திருந்தார் தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ.

இந்நிலையில், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தியை பயிற்றுவிக்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசியுள்ள இயக்குநர் கவுதமன், “தமிழ் வளர்ச்சித்துறைக்கு அமைச்சராக உள்ள பாண்டியராஜன் தமிழக மக்களுக்காகவும், தமிழ் மொழியின் நலனுக்காகவுமே பணியாற்றவேண்டும்.

அதை தவிர்த்து, சமஸ்கிருத மொழிக்கு வக்காளத்து வாங்குவது, கீழடி ஆய்வை பாரத பண்பாடு, கலாசாரம் கொண்டது என கூறுவதற்காக அல்ல. தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்டது.

தமிழ் மொழிக்கு என ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவும், உலகம் முழுவதும் தமிழ் மொழியின் சிறப்பை கொண்டு சேர்க்கவேண்டும் என்பதற்காகவும் நிறுவப்பட்டதே உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம். அதில், இந்தியை திணிப்பதும், அதற்கு எதிர்ப்பு வந்ததும் அதனூடே தெலுங்கு பிரெஞ்சு என மற்ற மொழிகளை சேர்ப்பதையும் செய்துவரும் அ.தி.மு.க அரசு யாரை ஏமாற்றப் பார்க்கிறது? ” என அவர் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

“சமஸ்கிருதத்துக்கு வக்காளத்து வாங்குவது தமிழ் வளர்ச்சித் துறையின் பணியல்ல” - இயக்குநர் கவுதமன் கண்டனம்!

மேலும், “உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தியை புகுத்துவது மொழிப்போர்த் தியாகிகளை அவமானப்படுத்துவதற்கும், அவர்களின் தியாகத்துக்கு துரோகம் இழைக்கும் செயல்” எனவும் கடுமையாகச் சாடியுள்ளார் இயக்குநர் கவுதமன்.

banner

Related Stories

Related Stories