தமிழ்நாடு

“முதல்வர் பழனிசாமி விருப்பத்தை தேர்தல் ஆணையர் பழனிசாமி நிறைவேற்றுகிறாரா?” : இரா.முத்தரசன் கேள்வி!

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு ஆளும் கட்சியின் விருப்பத்தை நிறைவேற்றும் அறிவிப்பாக இருப்பதாக முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

“முதல்வர் பழனிசாமி விருப்பத்தை தேர்தல் ஆணையர் பழனிசாமி நிறைவேற்றுகிறாரா?” : இரா.முத்தரசன் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பில் முறையாக விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என தி.மு.க மற்றும் இடதுசாரி கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக தேர்தல் ஆணையரின் உள்ளாட்சி தேர்தல் அறிவுப்புக்கு கண்டனம் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது, “ஆணையத்தின் அறிவிப்பு என்பது தேர்தலை நடத்தவா? நிறுத்தவா? என்ற கேள்வி எழுகின்றது. சிற்றூராட்சி, வட்டார ஊராட்சி, மாவட்ட ஊராட்சி ஆகிய அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடக்கும் என்றும் அவையும் இரண்டு கட்டமாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்டமாக நடத்தவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?

புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கான தேர்தல் குறித்தும் மாவட்ட ஊராட்சி அமைப்புகள் ஏற்படுத்துவது குறித்தும் எவ்வித தெளிவும் இல்லை. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பின்னர் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

“முதல்வர் பழனிசாமி விருப்பத்தை தேர்தல் ஆணையர் பழனிசாமி நிறைவேற்றுகிறாரா?” : இரா.முத்தரசன் கேள்வி!

மொத்தத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த விருப்பம் இல்லாத அ.தி.மு.க அரசு குழப்பத்தை ஏற்படுத்தி தேர்தலை நிறுத்துவதற்கான வழிவகைகளை உருவாக்கி வருகின்றது.

இத்தகைய குழப்பங்களின் காரணமாக நீதிமன்றத்தால் தேர்தல் நிறுத்தப்பட்டால் பிறர் மீது பழி சுமத்தி தாங்கள் தப்பித்துக் கொள்ளலாம் என்று அ.தி.மு.க. அரசு மேற்கொள்ளும் ஜனநாயக விரோத செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை என்பது அப்பட்டமாக வெளிப்படுகின்றது.

முதலமைச்சர் பழனிசாமியின் விருப்பத்தை நிறைவேற்றக் கூடியவராக தேர்தல் ஆணையர் பழனிசாமி செயல்பட்டு வருகின்றார் என்று கருதும் அளவிற்கே தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. தேர்தல் ஆணையத்தின் இன்றைய அறிவிப்பு தேர்தலை நடத்துவதற்காக அல்ல. மாறாக, ஆளும் கட்சி தேர்தலை நடத்திட வேண்டாம் என்கிற விருப்பத்தை நிறைவேற்றிடக் கூடிய அறிவிப்பாகும்.

கிராமம், நகரம் என்று வேறுபாடின்றியும், புதிய மாவட்டங்களையும் இணைத்து ஒரே நாளில் ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்திட, தமிழ்நாடு அரசும், தேர்தல் ஆணையமும் முன்வரவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories