தமிழ்நாடு

அரசு மருத்துவரின் அலட்சிய சிகிச்சையால் விரல்களை இழக்கும் நிலையில் மாணவன் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

அரசு மருத்துவரின் அலட்சியமான சிகிச்சையால் அரசுப் பள்ளி மாணவனின் கை விரல்கள் செயலிழக்கும் நிலையில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவரின் அலட்சிய சிகிச்சையால் விரல்களை இழக்கும் நிலையில் மாணவன் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அரசு மருத்துவரின் அலட்சியமான சிகிச்சையால் அரசுப் பள்ளி மாணவனின் கை விரல்கள் செயலிழக்கும் நிலையில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் - தமிழ்செல்வி ஆகியோரின் மகன் ஹரீஸ்குமார் (15). இவர் வெள்ளக்கல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இவர்களது வீடு கட்டுமான பணி நடைபெற்று வந்துள்ளது. அப்போது வீட்டு வேலை செய்தவர்கள் அவர்களது பொருட்களை வைத்துச் சென்றுள்ளனர். கடந்த ஜூலை மாதம் 6ம் அன்று வேலை செய்தவர்கள் விட்டுச்சென்ற கட்டிங் மெஷினை ஹரீஸ்குமார் எடுத்துப் பார்த்துள்ளார்.

அப்போது தெரியாமல் மெஷின் செயல்படத் தொடங்கியுள்ளது. மெஷினை இறுக்கமாகப் பிடிக்காததால் ஹரீஸ்குமாரின் வலது கை முன் பக்கத்தில் மெஷின் அறுத்துள்ளது.

பின்னர் சிகிச்சைக்காக முதற்கட்டமாக மேடவாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளனர். கையில் ஆழமாகக் கிழித்துள்ளது என்பதால் 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு ஹரீஸ்குமாரை பரிசோதித்த அரசு மருத்துவர் கார்த்திக் என்பவர் மெஷின் அறுத்த கையை பார்வையிட்டு 15 தையல் போட்டுள்ளார். அதேபோல் கையில் உள்ள இரண்டு நரம்புகள் துண்டிக்கப்பட்டிருந்ததால் நரம்புக்கும் தையல் போட்டதாக மருத்துவர், பாதிக்கப்பட்ட மாணவனின் தாயாரிடம் கூறியுள்ளார்.

அரசு மருத்துவரின் அலட்சிய சிகிச்சையால் விரல்களை இழக்கும் நிலையில் மாணவன் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

தொடர்ந்து 5 நாட்களாக குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஹரீஸ்குமார் வீடு திரும்பினார். சிறிது நாட்களில் ஹரீஸ்குமாருக்கு தையல் போட்ட லலது கையின் மூன்று விரல்களிலும் புண் ஏற்பட்டுள்ளதாகவும், விரல்கள் செயலிழப்பது போல இருப்பதாகவும் ஹரீஸ்குமார் பெற்றோரிடம் கூறியுள்ளார். 

இதைத்தொடர்ந்து மீண்டும் குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு ஹரீஸ்குமாரை அழைத்துச் சென்று மருத்துவர் கார்த்திக்கிடம் காட்டியுள்ளனர். ஹரீஸ்குமாரை பரிசோதித்த அரசு மருத்துவர் கார்த்திக் இதனால் பாதிப்பு இல்லை எனக் கூறி அவர்களை அனுப்பிவிட்டுள்ளார். 

வலது கையால் எதையும் எடுக்க முடியவில்லை, பேனா பிடித்து எழுத முடியவில்லை என ஹரீஸ்குமார் பெற்றோரிடம் மீண்டும் கூறியதால் கடந்த நவம்பர் 15ம் தேதியன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர். 

ஹரீஸ்குமாரை பரிசோதித்த சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையின் அரசு மருத்துவர்கள் கூறியதை கேட்டு ஹரீஸ்குமார் ரெற்றோர்கள் அதிர்ந்துபோயினர். முன்னதாக கையில் தையல் போட்ட மருத்துவர் விரல்களுக்கு இரத்தம் செல்லும் நரம்பை மாற்றி தைத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசு மருத்துவரின் தவறான சிகிச்சையால் ஏழை அரசுப் பள்ளி மாணவனின் கை விரல்கள் தற்போது செயலிழக்கும் நிலையில் உள்ளது. ஹரீஸ்குமாரின் விரல்களை குணப்படுத்த முடியுமா எனவும் அலட்சியமாகச் செயல்பட்ட அரசு மருத்துவர் மீது சுகாதாரத்துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது எனவும் அவரது பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி பழனிவேல் என்பவரிடம் கேட்டபோது, அவர் விசாரித்ததில் அப்படி ஒரு சம்பவமே தங்கள் மருத்துவமனையில் நடைடெறவில்லை என்றும் அப்படி ஒரு நோயாளி இங்கு சிகிச்சை பெறவில்லை எனவும் கூறியுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories