
மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு நீட் தேர்வைக் கொண்டுவந்து ஏழை மாணவர்களின் கனவை சிதைத்துள்ளது. அனைவருக்கும் மருத்துவ கல்வி என்று பொய் பிரச்சாரத்தை கூறிய பா.ஜ.க அரசால், பணம் உள்ளவர்களுக்கே மருத்துவப் படிப்பு என்ற நிலை உருவாகியுள்ளது. தமிழகம் கடும் எதிர்ப்புகளை எதிர்வித்தும் மதிக்காத பா.ஜ.க அரசு நீட்டை கைவிட மறுத்துவருகிறது.
இதில், சமீபத்தில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் என பல சிக்கல்கள் எழுந்துள்ளது. இந்நிலையில், நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாகவும், மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான இடங்களை முறையாக நிரப்ப உத்தரவிட கோரி, தீரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பின்னர் இதுதொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு தொடர்பான கைரேகை விவகாரத்தை சி.பி.சி.ஐ.டி-யிடம் வழங்க உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்றைய தினம் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில், நீட் தொடர்பான பயிற்சி மையங்கள் குறித்த அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்தது. அதில், இந்தாண்டு அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவப் படிப்பில் 3,081 மாணவர்கள் சேர்ந்துள்னர். அதில், 48 பேர் மட்டும் தனியார் நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறாதவர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட தகவலை ஆங்கில நாளிதழ் செய்தியாக்கியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, “இந்த ஆண்டு அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்களில் வெறும் 1.6 சதவிதமானவர்கள் மட்டுமே நீட் பயிற்சி மையம் சென்று பயிற்சி பெறாதவர்கள். தேர்ச்சி பெற்றவர்களில் 66 சதவிதமானவர்கள் பல முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.” என அதில் கூறிப்பிட்டுள்ளது.
மேலும், மருத்துவப் படிப்பில் சேர்க்கையில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பெரும்பாலானோர் தனியார் பயிற்சி மையம் மூலம் சென்றுள்ளனர். குறிப்பாக அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர்களில் 98.4 சதவிதமான மாணவர்கள் தனியார் பயிற்சி மையம் சென்றவர்கள். மீதமுள்ள 1.6 சதவித மாணவர்கள் மட்டுமே நீட் பயிற்சி மையம் சென்று பயிற்சி பெறாதவர்கள்.
அதேப்போல் தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்ந்தவர்களில் 96.9 சதவிச மாணவர்கள் பயிற்சி மையம் சென்றுள்ளனர் என்றும், 3.2 சதவித மாணவர்கள் பயிற்சி மையம் செல்லாமல் தனியார் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்த 66.2 சதவிதம் பேர் பலமுறை நீட் தேர்வு எழுதிய தேர்ச்சி பெற்றவர்கள். அதேப்போல் தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்ந்த 64.4 சதவிதமானவர்களும் பல முறை தேர்வு எழுதியுள்ளனர் என்பது தெரியவந்தது.

மேலும், தருமபுரி, தூத்துக்குடி, கோவை, திருவண்ணாமலை, விழுப்புரம், திருவாரூர் மற்றும் செங்கல்பட்டு போன்ற அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துளவர்களில் 100 சதவிதமானவர்கள் நீட் பயிற்சி மையத்தின் மூலம் சென்றவர்கள். இதில் தனியார் கல்லூரியான மேல்மருத்தூர் மத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளவர்களில் 100 சதவிகித பேரும் நீட் பயிற்சி மையத்தில் தேர்ச்சி பெற்றவர்கள்.
அதேபோல் சென்னையில் உள்ள மாதா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ள 98.7 சதவிதம் மேரும், பெரம்பலூர் தனலெட்சுமி சினிவாசன் கல்லூரியில் சேர்ந்தவர்களில் 98 சதவிதம் பேர் தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயின்றவர்கள்.
தனியார் பயிற்சி மையங்களில் முதலிடம் வகிக்கும் மாணவர் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியல்களையும் தெரிவித்துள்ளனர். அதில், தர்மபுரி, தூத்துக்குடி, கோவை, திருவண்ணாமலை, விழுப்புரம், திருவாரூர் மற்றும் செங்கல்பட்டு போன்ற அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இதில் 100 - 80 சதவிகித மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
முன்னதாக, நீட் பயிற்சி மையங்கள் 2 முதல் 5 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தனியார் நீட் பயிற்சி மையங்கள் 5 லட்சம் வரை கட்டணம் வசூலித்தால் ஏழை மாணவர்களால் எவ்வாறு நீட் பயிற்சி பெற முடியும் எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும், ஏழை மாணவர்களுக்காக மருத்துவ கல்லூரிகளின் கதவுகள் திறக்கப்படுவதில்லை என்று வேதனை தெரிவித்த நீதிபதிகள் மருத்துவப் படிப்பு அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சமமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். பல லட்சம் ரூபாய் கொடுத்து மருத்துவப் படிப்பு சேரும் முறையை மாற்ற நீட் தேர்வு கொண்டு வந்ததாக மத்திய அரசு கூறும் நிலையில், நீட் தேர்வு பயிற்சிக்காக அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.








