தமிழ்நாடு

கள்ளச்சாராய கும்பலை அம்பலப்படுத்திய மக்கள்மன்ற நிர்வாகிகள் மீது தாக்குதல்- போலிஸ் அலட்சியத்தால் விபரீதம்!

வேலூரில் கள்ளச்சாராயம் காய்ச்சி வந்த கும்பலை அம்பலப்படுத்திய மக்கள் மன்ற நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கள்ளச்சாராய கும்பலை அம்பலப்படுத்திய மக்கள்மன்ற நிர்வாகிகள் மீது தாக்குதல்- போலிஸ் அலட்சியத்தால் விபரீதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஈரளச்சேரி கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக மக்கள் மன்ற அமைப்பினருக்கு சிலர் தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து அதைத் தடுப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி தினேஷ் மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் சாராயம் காய்ச்சி விற்கும் இடத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

முன்னதாக இதுகுறித்த தகவலை அரக்கோணம் டி.எஸ்.பி-க்கு தெரிவித்துள்ளனர். ஆனால் காலை 8 மணிக்கு தகவல் கொடுத்த நிலையில் டி.எஸ்.பி மற்றும் காவல்படையினர் சிலர் மதியம் 3 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

போலிஸார் வருவதற்குள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்த இடத்தை சோதனையிட்டபோது போலிஸார் அங்கிருந்து சுமார் 16 சாராய பீப்பாய்களை கைப்பற்றினர். சட்டவிரோத செயலில் தொடர்புடையவர்களை போலிஸார் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த குற்றச் சம்பவங்களை வெளிக்கொண்டு வந்த மக்கள் மன்றத்தைச் சேர்ந்த தினேஷ் மற்றும் விவேகானந்தன் ஆகியோருக்கு மறைமுகமாக கள்ளச்சாராய கும்பல் மிரட்டல் விடுத்துள்ளது. இதனையடுத்து இருவருக்கும் பாதுகாப்பு வழங்கவேண்டும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவேண்டும் என கடந்த 23-ம் தேதி போலிஸாரிடம் புகார் அளித்தனர்.

புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 3 பேர் மீது சாதிரீதியாக இழிவுபடுத்தி, தாக்க முயற்சித்ததாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அதன் பிறகு போலிஸார் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யாமல் விட்டுள்ளனர்.

இதனையடுத்து 24-ம் தேதி விவேகானந்தன் அவரது மனைவியுடன் துணிக்கடைக்கு துணி எடுக்கச் சென்றுள்ளார். அப்போது கள்ளச்சாராயக் கும்பல் திட்டமிட்டு சாதிரீதியாக இழிவுபடுத்தியுள்ளனர். அந்த கும்பலைச் சேர்ந்த சிலர் பா.ம.க மற்றும் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் என மக்கள் மன்றத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, போலிஸாரிடம் புகார் அளிக்க விவேகானந்தனும், தினேஷும் சென்றுள்ளனர். அப்போது அங்கு குடியிருந்த கள்ளச்சாராயக்கடத்தல் கும்பல் இருவரையும், மக்கள் மன்றத்தினரையும் வழிமறித்து தாக்கியுள்ளனர். மேலும் அவர்களின் வாகனங்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.

காவல்துறையின் அலட்சியப் போக்கின் காரணமாகத் தான் இத்தகைய தாக்குதல் நடைபெற்றுள்ளதாக மக்கள் மன்றத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் தாக்குதலில் காயமானவர்களை பார்க்கச் சென்ற மக்கள் மன்ற உறுப்பினர்கள் 3 பேர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

குற்றவாளிகளை தடுக்காமல் போராடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது ஜனநாயக விதிமீறல், இத்தகைய பிரச்னைக்கு முடிவு கட்ட ஜனநாயக அமைப்பினர் ஒன்றிணைய வேண்டும் என மக்கள் மன்றத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories