தமிழ்நாடு

“அ.தி.மு.க ஆட்சியில் அதிகரித்த தேர்வுக் கட்டணம்” : 4-வது நாளாக கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

தேர்வுக் கட்டண உயர்வு, இந்தி திணிப்பு ஆகியவற்றுக்கு எதிராக திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 4-வது நாளாக இன்றும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“அ.தி.மு.க ஆட்சியில் அதிகரித்த தேர்வுக் கட்டணம்” : 4-வது நாளாக கல்லூரி மாணவர்கள் போராட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அரசு கல்லூரிகளில் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இளங்கலை பாடப்பிரிவுகளுக்கு ரூ.68 ஆக இருந்த தேர்வுக் கட்டணம் 100 ரூபாயாகவும், முதுகலை பாடப்பிரிவுகளுக்கு ரூ.113 ஆக இருந்த தேர்வு கட்டணம் 160 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தினர் தலைமையில் மாணவர்கள் 4-வது நாளாக வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவ - மாணவிகள் நேற்று முதல் வகுப்புகளை புறக்கணித்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்வுக் கட்டண உயர்வை கண்டித்தும், இதனை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசு கல்லூரி மாணவ - மாணவிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் போது தேர்வுக் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், புதிய கல்வி கொள்கைக்கு எதிராகவும், இந்தி மொழி திணிப்புக்கு எதிராகவும் மாணவர்கள் கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர்.

“அ.தி.மு.க ஆட்சியில் அதிகரித்த தேர்வுக் கட்டணம்” : 4-வது நாளாக கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநில நிர்வாகி ஒருவர் கூறுகையில், “அரசு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பல்வேறு கடினமான சூழல்களில் இருந்து வருகிறவர்கள். இந்நிலையில் அ.தி.மு.க அரசின் இந்தத் தேர்வுக் கட்டண உயர்வு என்பது மாணவர்கள் மீது மிகப்பெரிய சுமையாக மாறும்.

மேலும், மாணவர்கள் கல்லூரியில் இருந்து பாதியிலேயே நின்றுவிடும் அபாயமும் உள்ளது. இந்த கட்டண உயர்வு இடைநிற்றலைத்தான் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, ஏற்கனவே பேருந்து கட்டணம் உயர்ந்து விட்டது, ஸ்காலர்ஷிப் முறையாக வழங்கப்படவில்லை. இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தேர்வுக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது பல்கலைக்கழகம்.

இப்போது மாணவர்களின் நிலை தனியார் கல்லூரியில் படிப்பதுபோல் உள்ளது. இந்த கட்டண உயர்வை உடனடியாக திருவள்ளுவர் பல்கலைக்கழகம் திரும்ப பெற வேண்டும். இம்முறை பல்கலைகழக நிர்வாகம் தேர்வு கட்டணத்தை குறைக்காத வரை போராட்டத்தைக் கைவிடமாட்டோம்” என எச்சரித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories