தமிழ்நாடு

“குழந்தைங்க வந்தா என்னாகும்? மெதுவா ஓட்டுங்கப்பா...” : எச்சரித்த நண்பர்களை வெட்டிச் சாய்த்த கொடூரர்கள்!

தூத்துக்குடியில் வேகமாக வாகனம் ஓட்டியவர்களை எச்சரித்ததற்காக நண்பர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“குழந்தைங்க வந்தா என்னாகும்? மெதுவா ஓட்டுங்கப்பா...” : எச்சரித்த நண்பர்களை வெட்டிச் சாய்த்த கொடூரர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மரைன் என்ஜினீயர் முருகேசன். இவரது மனைவி இந்திராகுமாரி டெல்லியில் தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு விடுமுறைக்காக முருகேசன் தூத்துக்குடியில் உள்ள தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

முருகேசன் ஊருக்கு வந்தாலே தூத்துக்குடியில் பிரையாண்ட் பகுதியில் உள்ள நண்பர் விவேக்கை சந்ததிப்பது வழக்கம். அப்படி இந்தாண்டும் வந்து சந்தித்துள்ளார்கள். இருவரும் பள்ளிப் பருவத்திலிருந்து நண்பர்கள் என்பதால் அடிக்கடி சந்தித்துள்ளனர்.

அப்படி நேற்று மாலை சிவந்தாகுளம் பகுதியில் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த சிறிய தெருவின் வழியாக மணிகண்டன் என்பவரும் அவரது நண்பர்களும் இருசக்கர வாகனங்களில் வேகமாக வந்துள்ளனர். இதைப் பார்த்த முருகேசன் அவர்களை வழிமறித்து, “இந்த சின்ன தெருவில் இவ்வளவு வேகமாக வண்டிய ஓட்டிட்டு போறீங்க... சிறுவர்கள் யாராவது வந்தால் என்ன ஆகும், மெதுவாகச் செல்லுங்கள்” என்று அறிவுரை கூறியுள்ளார்

அப்போது மணிகண்டனும் அவரது நண்பர்களும் மதுபோதையில் இருந்ததாகவும், முருகேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து முருகேசன் போலிஸிடம் புகார் அளிப்பேன் என எச்சரித்துள்ளார். அப்போது மணிகண்டன் தரப்பு தாக்குதல் நடத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அறிந்து வந்த அப்பகுதி மக்கள் மணிகண்டனை சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.

முருகேசன் | விவேக்
முருகேசன் | விவேக்

இந்நிலையில் மணிகண்டன் சிறிது நேரத்தில் மூன்று வாகனங்களில் ஆட்களுடன் வந்து நின்றுகொண்டிருந்த முருகேசனை சரமாரியாக வெட்டத் தொடங்கியுள்ளனர். இதனைத் தடுக்க முயன்ற அவரது நண்பர் விவேக்கையும் விரட்டி விரட்டி வெட்டியுள்ளனர். இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விவேக் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் முருகேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலிஸார் கொலைக்குற்றத்தில் ஈடுபட்ட மணிகண்டன் உட்பட ஏழுபேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட விவேக் மற்றும் முருகேசன் குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அப்பகுதி முழுவதும் போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தெருவில் வேகமாகச் சென்ற இளைஞரை தட்டிக்கேட்டதால் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories