தமிழ்நாடு

“இனி ஹெச்.எம் கிடையாது; பிரின்ஸிபால் மட்டும்தான்” : அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்க முயற்சி ?

தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைப் போன்று இனி அரசுப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் முதல்வர் (பிரின்ஸிபால்) என்றே அழைக்கப்படுவர் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

“இனி ஹெச்.எம் கிடையாது; பிரின்ஸிபால் மட்டும்தான்” : அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்க முயற்சி ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கான ரேங்கிங் முறை நிறுத்தப்பட்டு மதிப்பெண்கள் மட்டுமே வெளியிடப்பட்டு வருகிறது.

அதுபோல, இதுவரை 1200 மதிப்பெண்களுக்கு தேர்வெழுதி வந்த 11,12 வகுப்பு மாணவர்களுக்கு 600 மதிப்பெண்களில் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக பள்ளிக்கல்வித்துறை.

அதில், அரசுப் பள்ளிகளில் இனி தலைமை ஆசிரியர் பிரின்ஸிபால் (பள்ளி முதல்வர்) என்றே அழைக்கப்படுவார். தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், இனி ஆசிரியர்கள் என்றும், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளி முதல்வராகவும் கருதப்படுவர். ஒரே வளாகத்தில் செயல்படும் தொடக்கப் பள்ளிகளின் முழு அதிகாரமும், மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் வசமே ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கான விடுமுறை, பணித் தேர்வு, தேர்வு நடத்துவது, பள்ளிகளுக்கான விடுமுறை, மாணவர் சேர்க்கை உள்ளிட்ட அனைத்தும் பள்ளியின் முதல்வர் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைப் போன்று அரசுப் பள்ளிகளுக்கும் பிரின்ஸிபால் முறையை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.

அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைப்பதற்காக முன்னோட்டமாக இந்த நடவடிக்கை இருப்பதாக கல்வியாளர்கள் கருதுகின்றனர். அவ்வாறு தனியார் வசம் சென்றால் ஏழை எளிய மாணவர்களின் கல்வி நலன் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என்றும் அஞ்சுகின்றனர்.

ஏற்கெனவே மத்திய அரசு நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசுப் பள்ளிகளில் தனியார் கல்வி நிலையங்களைப் போன்று அதிகாரங்களை மாற்றியிருப்பது மக்களிடையே ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories