தமிழ்நாடு

பணத்தாசையால் உடன் படிக்கும் மாணவனை கடத்திய நண்பர்கள் - ரூபாய்க்கு பதில் பேப்பரை வைத்து பிடித்த போலிஸ்

வேலூர் சத்துவாச்சேரியில் கல்லூரி மாணவனை 3 கோடி ரூபாய் பணம் கேட்டு சகமாணவர்களே கடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பணத்தாசையால் உடன் படிக்கும் மாணவனை கடத்திய நண்பர்கள் - ரூபாய்க்கு பதில் பேப்பரை வைத்து பிடித்த போலிஸ்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

வேலூர் மாவட்டம் சத்துவாச்சேரியை சேர்நதவர் கென்னடி. இவர் வெளிநாட்டில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் கோகுல் அதே பகுதியிலுள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் கல்லூரி முடிந்து வீடு திரும்ப வேண்டிய கோகுல் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்தது கோகுலின் செல்போனுக்கு அவரது தாயார் தொடர்புகொண்ட போது கோகுலின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனிடையே கோகுலின் தாயாரின் செல்போனிற்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.

மாணவன் கோகுல்
மாணவன் கோகுல்

எதிர்முனையில் பேசிய நபர், உங்கள் மகனை நாங்கள் கடத்தியுள்ளோம். அவன் உயிரோடு வேண்டுமென்றால் 3கோடி ருபாய் பணம் தர வேண்டும். போலிஸிற்கு போனால் மகனை உயிரோடு பார்க்க முடியாது என மிரட்டியுள்ளனர். இதனையடுத்து கோகுலின் தாயார் மற்றும் உறவினர்கள் சத்துவாச்சேரி காவல் நிலையத்தில் மாணவன் கடத்தப்பட்டது குறித்து புகார் அளித்தனர். இதையடுத்து மாணவனை மீட்க மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் 3 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே மாணவனின் தாயாரிடம் மீண்டும் பேசிய கடத்தல் கும்பல், பணம் தயாரா என கேட்டுள்ளனர். அதற்கு அவ்வளவு தொகை எங்களிடம் இல்லை என கோகுலின் தாயார் தெரிவித்துள்ளார். ஒரு ஐந்து லட்சமாவது தாருங்கள், உங்களால் அது முடியும் என கடத்தல்காரர்கள் இறங்கிவந்தனர். மேலும், பணத்தை ஒரு பையில் போட்டு வள்ளிமலை கூட்டுரோடு அருகே பணப்பையை கொடுத்துவிட்டு உங்கள் மகனை அழைத்துச்செல்லலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

பணத்தை கொடுப்பது போல் சென்று கடத்தல் கும்பலை பிடிக்க போலிஸார் திட்டமிட்டனர். இதற்காக பணப்பையில் மேலும் கீழும் பணக்கட்டை அடுக்கி நடுவே காகிதங்களை வைத்து பணப்பையை தயார் செய்து கோகுலின் தாயாரிடம் போலிஸார் கொடுத்துள்ளனர்.

கடத்தல் கும்பல் கூறிய இடத்தில் பையை வைத்துவிட்டு மாணவனின் தாயார் வந்துவிட்டார். சிறிது நேரத்தில் காரில் வந்த கடத்தல் கும்பல் பணப்பையை திறந்து பணமிருப்பதை உறுதி செய்துவிட்டு மாணவன் கோகுலை காரிலிருந்து இறக்கிவிட்டு கரை எடுத்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த போலிஸார் காரை மடக்கிப் பிடித்து கடத்தல் கும்பலை கைது செய்தனர்.

கடத்தியவர்கள் அனைவரும் கோகுல் படிக்கும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என தெரியவந்தது. மேலும், மாணவனின் தந்தை வசதியானவர் என்பதால் கடத்தினால் காசு பார்க்கலாம் என முடிவு செய்து கார் வைத்துக் கடத்தியதாக போலிஸாரிடம் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் 4 பேரிடமும் இந்தக் கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணத்துக்காக கல்லூரி மாணவனை சகமாணவர்களே கடத்தி வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சில மணி நேரத்திலேயே மாணவனை மீட்டு கடத்தியவர்களை கைது செய்த காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories