தமிழ்நாடு

1 ரூபாய்க்கு பூப்போன்ற இட்லி - ஏழைகளின் பசியாற 80 வயதில் தளராது உழைக்கும் கோவை பாட்டி!

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர் ஒரு இட்லியை 1 ரூபாய் விற்பனை செய்து வருகிறார். அவரின் இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.

1 ரூபாய்க்கு பூப்போன்ற இட்லி - ஏழைகளின் பசியாற 80 வயதில் தளராது உழைக்கும் கோவை பாட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

விலைவாசி விண்ணை முட்டிய இந்த காலகட்டத்திலும், சூடுபறக்கும் இட்லியை ஒரு ரூபாய்க்கு 80 வயது பாட்டி ஒருவர் விற்பனை செய்து வருகிறார்.

கோயம்பத்தூர் மாவட்டம் வடிவேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலாத்தாள். 80 வயதான இவர் எந்தவித இயந்திரங்களையும் பயன்படுத்தாமல் உரல்களில் அறைத்து உணவு தயாரித்து விற்பனை செய்து வருகிறார். பஞ்சு போன்ற இட்லி, சூடான சாம்பார் மற்றும் காரமான சட்னியை வெறும் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்.

காலை 8 மணிக்கே வரும் வாடிக்கையாளர்களை புன்னகையுடன் வரவேற்று அவர்களுக்கு அவரே பரிமாறுவும் செய்கிறார். வாடிக்கையாளர்களில் பெரும் பகுதியினர் தினக் கூலி தொழிலாளர்கள், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்தான்.

இதுகுறித்து பாட்டி கமலாத்தாள் கூறியதாவது, “ 30 வருடமாக வடிவேலம்பாளையத்தில் இட்லி விற்று வருகிறேன். எனது குடும்பத்தில் இருப்பவர்கள் விவசாயக் கூலி வேலைக்கு சென்றுவிடுவார்கள். அப்போது வீட்டில் எந்த வேலையும் இல்லையே என இட்லி சுட்டு விற்க ஆரம்பித்தேன்.” என்கிறார்

தன்னிடம் உணவு வாங்கி சாப்பிடும் கூலித் தொழிலாளர்கள் காலையில் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதை நினைத்து மகிழ்ச்சி அடைவதாகவும், ஒருநாளைக்கு ஆயிரம் இட்லிகள் வரையும் விற்பனையாகிறதெனவும் கூறுகிறார் கமலாத்தாள்.

வடிவேலம்பாளையம் அருகே வசிக்கும் பெரும்பாலான மக்கள் நடுத்தர, அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள்.

கமலாத்தாள்
கமலாத்தாள்

இந்த தினக்கூலித் தொழிலாளர்களுக்கு தினமும் காலை உணவுக்கு ரூபாய் 35 அல்லது ரூபாய் 50 செலுத்துவது என்பது கடினம். அதேப்போல உணவங்களில் கொடுக்கும் உணவும் அவர்களின் உடல் பசியை போக்குவதில்லை.

அதனால், அவர்களின் பசியைப் பூர்த்தி செய்வதில் மட்டுமேதான் கவனம் செலுத்துவதாக தாய்க்கே உண்டான கரிசனத்தோடு பேசுகிறார் கமலாத்தாள். தனது வாடிக்கையாளர்களின் ஏழ்மை நிலையறிந்து தான் இட்லியை 1 ரூபாய்க்கு விற்க முடிவு செய்வதாக கூறுகிறார். இதனால் அவர்களின் குடும்பத்திற்கு கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்தவும் உதவும். இந்த ஒரு ரூபாயில் தனக்கு லாபம் கிடைக்கிறது என்றும், அதுவே தனக்கு போதும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,“பலர் என்னை அணுகி விலையை உயர்த்தச் சொல்கிறார்கள். ஏழைகளுக்காக நான் இதைச் செய்கிறேன் என்று அவர்களிடம் சொல்கிறேன், ”என்று அவர் நெகிழ்ச்சியோடு கூறினார்.

இந்த பாட்டியிடம், இட்லி சாப்பிடவரும் வாடிக்கையாளர்கள் பாரம்பரிய தொடர்பு இருப்பது போல உணர்வதாக கூறுகின்றனர். சாணம் பூசியத் தரை, ஒரு மண் அடுப்பு, இலைத்தட்டு இதுதான் அந்த உணர்வைக் கொடுக்கிறது என்கின்றனர் வாடிக்கையாளர்கள். இதை எல்லாம் விட பாட்டியின் கைமணத்தில் இந்த இட்லி செம ருசி என புகழ்கின்றனர் தினமும் சாப்பிட்டுச் செல்பவர்கள்.

banner

Related Stories

Related Stories