தமிழ்நாடு

பட்டியலினத்தவர் உடலை தகனம் செய்ய அனுமதி மறுத்து தீண்டாமை - கொட்டும் மழையில் பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்

மதுரை அருகே பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலை பொது மாயானத்தில் எரிக்க அனுமதி மறுத்ததனால் கொட்டும் மழையில் பெட்ரோல் ஊற்றி உடலை எரித்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

பட்டியலினத்தவர் உடலை தகனம் செய்ய அனுமதி மறுத்து தீண்டாமை - கொட்டும் மழையில் பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மதுரை அருகே பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலை பொது மாயானத்தில் எரிக்க ஆதிக்க சாதியினர் அனுமதிக்காததால், கொட்டும் மழையில் பெட்ரோல் ஊற்றி உடலை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமை, சாதி மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தீண்டாமை பிரச்சனையையும், சாதி மோதல்களையும் ஆளும் அ.தி.மு.க அரசு தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த வாரம் வேலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தினருக்கு, சுடுகாட்டிற்குச் செல்ல வழி இல்லாததால் சடலத்தை பாலத்தில் இருந்து கையிறு கட்டி கீழே 20 அடி இறக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவம் குறித்து அரசு எடுத்த நடவடிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுக்கா பேரையூர் பகுதியில் பட்டியலின மக்கள் தீண்டாமை கொடுமையால் உள்ளாகியுள்ளனர்.

இந்த பகுதியில் வாழும் பட்டியிலனத்தவர்கள் உயிரிழந்தால் அவர்களின் உடலை, பொது மாயானத்தில் தகனம் செய்ய ஆதிக்க சாதியினர் அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பட்டியலினத்தவர் உடலை தகனம் செய்ய அனுமதி மறுத்து தீண்டாமை - கொட்டும் மழையில் பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்

கடந்த வாரம் அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உடல்நலக்குறைவுக் காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு இறுதி சடங்கு செய்து, சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் போது ஆதிக்க சாதியினர் பொது சுடுகாட்டில் தகனம் செய்யக்கூடாது என தடுத்து நிறுத்தி மிரட்டியுள்ளனர்.

இதனால் வேறு வழி தெரியாமல், சுடுகாட்டிற்கு எதிரில் இருந்த திறந்த வெளிப் பகுதியில் வைத்து எரியூட்ட முடிவு செய்தன. ஆனால் அதற்குள் மழை பெய்யவே எரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொட்டும் மழையில் செய்வது அறியாமல் தவித்த உறவினர்கள், தார்பாய் போர்த்தி, அதன் மீது பெட்ரோல் ஊற்றி வேதனையுடன் எரித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்ததாவது,” அரசு பொதுமயானம் கட்டிக் கொடுத்தாலும் அதில், எங்களை அனுமதிப்பதில்லை. இதனால் மிகுந்த வேதனையை சந்தித்து வருகின்றோம். எனவே அரசு எங்களுக்கு புதிய மயானம் ஒன்றைக் கட்டிக் கொடுக்க வேண்டும்.” என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

முன்னதாக வேலூரில் பாலத்தில் இருந்து சடலத்தை இறக்கிய வழக்கில் தனி மயானம் அமைத்துத் தாருவதாக அரசு சொன்னதற்கு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. சாதி பாகுபாட்டை அரசு ஊக்குவிக்கும் நடவடிக்கையாக இது தெரிவதாக கண்டனங்களை பதிவு செய்தது நீதிமன்றம்.

வேலூர் வழக்கை தாமாக முன் வந்து விசாரித்த நீதிமன்றம், திருமங்கலம் வழக்கையும் விசாரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி விசாரணைக்கு வந்தால்ம் தீண்டாமையை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்விக்கு, தமிழக அரசு என்ன பதில் வைத்திருக்கிறது என்பதும் கவனிக்க வேண்டியது அவசியம்.

banner

Related Stories

Related Stories