தமிழ்நாடு

மணல் கடத்தலை தடுத்த என்னை ஓ.பி.எஸ், சேகர் ரெட்டியின் அடியாட்கள் தாக்கினார்கள் - முகிலன் ‘பகீர்’ தகவல்

முதலைப்பட்டியில் சமூக ஆர்வலர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு அரசின் மெத்தனப்போக்கே காரணம் என சமூக செயற்பாட்டாளர் முகிலன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மணல் கடத்தலை தடுத்த என்னை ஓ.பி.எஸ், சேகர் ரெட்டியின் அடியாட்கள் தாக்கினார்கள் - முகிலன் ‘பகீர்’ தகவல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சமூக செயற்பாட்டாளரும், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் முகிலன். இவர் ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் விவகாரம், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் என மண்ணை பாதிக்கும் பிரச்சனைக்கான போராட்டங்களில் மிகவும் முக்கியப் பங்காற்றியவர்.

குளித்தலையைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் போலிஸார் முகிலன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், முகிலன் மீது கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட சீத்தப்பட்டி பகுதியில் நடந்த தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசத்துரோக வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக இன்று திருச்சி மத்திய சிறையில் இருந்து முகிலனை அழைத்து வந்து கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது முதலைபட்டியில் சமூக செயல்பாட்டாளர்கள் 2 பேர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து முழக்கம் எழுப்பிய முகிலன் அரசின் கையாலாகாத்தனம்தான் இச்சம்பவத்திற்கு காரணம் என கண்டனம் தெரிவித்தாா்.

இதனையடுத்து பேசிய அவர், ''மணல் கொள்ளைக்கு எதிராக செயல்பட்டதால் தான் விஸ்வநாதனை போலீசார் கைது செய்துள்ளனர். அவரின் நடவடிக்கையால் கோம்புபாளையத்தில் இருந்து தோட்டக்குறிச்சி வரை மணல் எடுக்க முடியவில்லை. ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய தாக்குதலை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல முயற்சித்ததால், அதை தடுக்கும் வகையில் விஸ்வநாதனை போலீசார் கைது செய்துள்ளனர்.

2016ம் ஆண்டு மணல் கொள்ளைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட என்னையும், விஸ்வநாதனையும் சேகர் ரெட்டி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்கள் போலீசாரின் கண்முன்னேயே தாக்கினர். எங்களைத் தாக்கியவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மணல்கடத்தலில் ஈடுபடுபவர்கள் தைரியமாக கொலைகளை செய்கின்றனர்'' இவ்வாறு தெரிவித்தார்.

சமூக செயல்பாட்டாளர் விஸ்வநாதனை சி.பி.சி.ஐ.டி போலீசார் பொய் வழக்கில் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பியபடி நீதிமன்றத்திற்குள் சென்றார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சற்றுநேரம் பரபரப்பு உண்டானது.

banner

Related Stories

Related Stories