தமிழ்நாடு

“வெந்த புண்ணில் வேல்பாய்ச்சாமல் சட்டம் ஒழுங்கை சீர்செய்க” : சிபிஐ(எம்) கோரிக்கை!

படுகொலை சம்பவங்கள் தொடர்வது எடப்பாடி அரசின் கீழ் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது என சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

“வெந்த புண்ணில் வேல்பாய்ச்சாமல் சட்டம் ஒழுங்கை சீர்செய்க” : சிபிஐ(எம்) கோரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருநெல்வேலி மாநகர முன்னாள் மேயரும், தி.மு.க மாவட்ட மகளிரணி அமைப்பாளருமான உமா மகேஸ்வரி அவரது கணவர் முருகசங்கரன் மற்றும் வீட்டுப் பணிப்பெண் மாரியம்மாள் ஆகிய மூவரும் நேற்று முன்தினம் பட்டப்பகலில் பாளையங்கோட்டையில் உள்ள அவரது வீட்டிற்குள் புகுந்து கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, “திருமதி உமாமகேஸ்வரி உள்ளிட்ட மூவரின் கொலை பட்டப்பகலில் நடந்திருக்கிறது. சமூக விரோதிகள் பயமின்றி சட்டவிரோத நடவடிக்கைகளில் துணிச்சலாக ஈடுபட்டு வருகின்றனர். இக்கொலை சம்பவம் நெல்லை மாவட்ட மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஜூன் 12ம் தேதி வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் அசோக் சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டார். அதன்பின் பாளையங்கோட்டையில் பெருமாள் கண்ணன் என்பவரும், களக்காட்டில் ஒருவரும் வெட்டிக் கொல்லப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரில் தம்பதிகள் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

“வெந்த புண்ணில் வேல்பாய்ச்சாமல் சட்டம் ஒழுங்கை சீர்செய்க” : சிபிஐ(எம்) கோரிக்கை!

அடுத்தடுத்து நெல்லை மாவட்டத்தில் நடந்து வரும் படுகொலை சம்பவங்கள் அரசு மீதும், காவல்துறை மீதும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு படுகொலை சம்பவங்கள் தொடர்வது எடப்பாடி அரசின் கீழ் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

இதே பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வயதான தம்பதிகள் கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது என முதலமைச்சரும், அமைச்சர்களும் அனுதினமும் கூறி வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கையாகும்.

எனவே, திருமதி உமாமகேஸ்வரி மற்றும் இருவரின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நெல்லை மாவட்டத்தில் அதிகரித்து வரும் சட்ட விரோத, சமூக விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வற்புறுத்துகிறது.” என அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories