தமிழ்நாடு

அரசின் கவனத்தை ஈர்க்க ஜூலை 7-ல் போராட்டம் : ஜாக்டோ ஜியோ அறிவிப்பு!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவின் ஒரு நாள் அடையாள போராட்டம் ஜூலை 7-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் கவனத்தை ஈர்க்க ஜூலை 7-ல் போராட்டம் : ஜாக்டோ ஜியோ அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரின் இன்றைய கூட்டத்தில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கை குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதனையடுத்து சென்னை திருவல்லிக்கேணியில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இதன்பிறகு பேசிய ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன், கடந்த ஜனவரி மாதம் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம். பின்னர் மாணவர்கள் நலன் கருதி பணிக்குத் திரும்பினோம்.

இருந்தாலும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மீது அரசு பழிவாங்கும் தொனியில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் அவர்களின் பதவி உயர்வும் பறிபோனது. இது தொடர்பாக பல முறை கோரிக்கை விடுத்தும் இதுவரை அதற்கான பதில் இல்லை என அதிருப்தி தெரிவித்தார்.

இந்நிலையில் சட்டப்பேரவைக் கூட்டத்தின் இன்றைய விவாதத்தின்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அது தொடர்பாக எவ்வித அறிவிப்பும் இல்லை.

எனவே, வருகிற ஜூலை 7-ம் தேதி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னை சேப்பாக்கத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஈடுபடுவர் எனத் தெரிவித்தார். இதில் ஜாக்டோ ஜியோ தலைவர், மாநில ஒருங்கிணைப்பாளர்கள், செயலாளர்கள் பங்கேற்பர் எனவும் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories