தமிழ்நாடு

ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தபட்டால் தமிழகம் பாலைவனம் ஆகிவிடும் - வைகோ !

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதால் மத்திய அரசிற்கும் வேதாந்தா நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும். ஆனால் தமிழகம் பாலைவனம் ஆகிவிடும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தபட்டால் தமிழகம் பாலைவனம் ஆகிவிடும் - வைகோ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் 'பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம்' சார்பில் விழுப்புரம் மாவட்டம் மரக்கானத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் வரை 596 கிலோ மீட்டருக்கு மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.

மரக்காணத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, பொன்முடி, விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயம் பாதிக்கப்படும், தமிழகம் பாலைவனமாகும். லட்சக்கணக்கான லிட்டர் நீரை ரசாயனம் கலந்து நிலத்துக்குள் செலுத்துவதால் மிக கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் எண்ணெய் கிணறுகள் தோண்டப்பட்டால், நிலத்தடி நீர் நஞ்சாக மாறி விடும். மேலும் காவிரி படுகையில் 25 லட்சம் ஏக்கர் விளைநிலம் பாதிக்கப்படும்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதால் மத்திய அரசிற்கும், வேதாந்தா நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும். ஆனால் தமிழகமோ அழிந்து போகும். தமிழகம் அழிவதை தடுக்க தான் 596 கி.மீ தொலைவிற்கு மனித சங்கிலி அமைத்து அறவழியில் போராட்டம் நடத்தப்படுகிறது என்றார். இது போன்ற திட்டங்களால் தமிழகத்தில் குடிப்பதற்கு தண்ணீரே இல்லாமல் போகும். அப்போது மக்கள் என்ன செய்வார்கள் என்று சிந்திக்க கூட இயலவில்லை என வேதனை தெரிவித்தார்.

முன்னதாக இந்த போராட்டத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு அளித்து அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துக் கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் ஏரளமான தி.மு.கவினர் மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர். மேலும் இந்த போராட்டத்தில் ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி, சி.பி.ஐ, சி.பி.ஐ(எம்) மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

banner

Related Stories

Related Stories