தமிழ்நாடு

உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க பாஜக தீவிரம்: மின்கோபுரம் மீது ஏறி விவசாயிகள் போராட்டம்!

விளைநிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கான பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் மின்கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க பாஜக தீவிரம்: மின்கோபுரம் மீது ஏறி விவசாயிகள் போராட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் உள்ள கோவை, தருமபுரி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள விளைநிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கான பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வந்தது. நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அந்த திட்டத்தை தற்காலிகமாக கிடப்பில் போட்ட பா.ஜ.க அரசு தற்போது மீண்டும் கையில் எடுத்துள்ளது.

கோவை மாவட்டம் சூலூரில் உள்ள விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதற்கான பணியில் மத்திய அரசின் பவர் க்ரீட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இது குறித்து அறிந்த விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் மின்கோபுரம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், உயர் மின் அழுத்தத்தால் தங்களுக்கும் தங்களது விளை நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் எனவும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், உயர்மின் கோபுரங்களில் மின் வழித்தட கம்பிகள் அமைக்கும் பணிக்காக ஊழியர்கள் நேற்று குண்ணுமுறிஞ்சி கிராமத்துக்கு வந்தனர். தகவலறிந்த விவசாயிகள் அங்கு திரண்டனர். உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, விவசாயிகள் பன்னீர்செல்வம், ஏழுமலை ஆகியோர் திடீரென உயர்மின் கோபுரங்களில் ஏறி, கீழே குதித்து தற்கொலை செய்துகொள்வோம் எனத் தெரிவித்ததால் அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க பாஜக தீவிரம்: மின்கோபுரம் மீது ஏறி விவசாயிகள் போராட்டம்!

தகவலறிந்து காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளை சமாதானம் செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், எங்களது கோரிக்கைகளை அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டால்தான் போராட்டத்தைக் கைவிடுவோம் என எச்சரித்தனர்.

மேலும், ஏற்கனவே மின் கோபுரங்கள் அமைத்த விளை நிலங்களின் உரிமையாளர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும், இழப்பீடு வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழிக்க கூடாது, செல்போன் டவர்களுக்கு வழங்குவதை போல மாதாந்திர வாடகை வழங்க வேண்டும் என விவசாயிகள் காவல்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

இதனையடுத்து அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மேலும், மின் கோபுரத்தில் கம்பிகள் அமைக்கும் பணி தற்காலிகமாக கைவிடப்பட்டது. சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு, மின் கோபுரத்தில் இருந்து விவசாயிகள் இருவரும் கீழே இறங்கி வந்தனர்.

banner

Related Stories

Related Stories