தமிழ்நாடு

நளினி ஆஜராவதில் உங்களுக்கு என்ன சிக்கல் : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி !

நளினி, ஆஜராவதில் என்ன பிரச்னை உள்ளது, பாதுகாப்பு ஏற்பாடு செய்தால் என்ன, அதில் உங்களுக்கு என்ன சிக்கல் என்று அரசுத்தரப்பிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நளினி ஆஜராவதில் உங்களுக்கு என்ன சிக்கல் : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் 28 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, லண்டனில் வசிக்கும் தன் மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஆறு மாதம் பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,

''27 ஆண்டுகளாக நான் சிறைவாசம் அனுபவித்து வரும் நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆயுள் கைதிகளுக்கு வழங்கப்படும் ஒரு மாத பரோல் கூட எனக்கு வழங்கப்படவில்லை. என்னுடைய மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட 2000ம் ஆண்டுக்கு பின்னர் 10 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த 3,700 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் என்னை விடுவிக்கவில்லை.

20 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த ஆயுள் கைதிகளை விடுவிக்க வழி வகை செய்யும் வகையில் 1994ம் ஆண்டு இயற்றப்பட்ட, ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்யும் சட்டத்தின் படி என்னை முன் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசிடம் கோரியுள்ளேன், என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் உட்பட ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறை வாசம் அனுபவித்து வரும் எழுவரையும் விடுவிக்கக் கோரி, தமிழக அரசு ஆளுநரிடம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பரிந்துரைத்தும் இன்னும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தன் தாத்தா பாட்டியுடன் லண்டனில் வசிக்கும் என் மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் எனக்கு ஆறு மாதம் பரோல் வழங்க வேண்டும் என வேலூர் சிறைத்துறை டிஐஜி யிடம் நான் அளித்த மனு நிலுவையில் உள்ளது.

அதேபோல என் தாய் பத்மாவதியும் இதே கோரிக்கையுடன் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த இரண்டு மனுக்களும் நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு ஆறு மாத பரோல் வழங்க உத்தரவிட வேண்டும். இந்த வழக்கில் நானே ஆஜராகி வாதாட விரும்புவதால் என்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தமிழக அரசுக்கும், சிறைத்துறைக்கும் உத்தரவிட வேண்டும்'' இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மேலும், இந்த மனு மீதான விசாரணைக்கு தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் , நிர்மல்குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மகளின் திருமண ஏற்பாடு தொடர்பாக கூடுதல் ஆவணங்களை நளினி தாக்கல் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டது.

அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நளினியை ஆஜர்ப்படுத்துவதில் சில பாதுகாப்பு பிரச்சினைகள் உள்ளது அதனால் ஆஜர்படுத்துவதில் சிக்கல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘வழக்கு விசாரணையில் மனுதாரர் ஆஜராவதை தடுக்க முடியாது. வழக்கில் வாதாட அவர்களுக்கு உரிமை உள்ளது. நளினி ஆஜராவதில் என்ன பிரச்னை உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடு செய்தால் என்ன? அவர் நேரில் ஆஜராகி வாதிட உரிமை உள்ளது. அதில் உங்களுக்கு என்ன சிக்கல்’’ என்று அரசுத்தரப்பிடம் கேட்டனர்.

அரசு வக்கீல் இதுகுறித்து அரசிடம் கேட்டு சொல்வதாக தெரிவித்ததையடுத்து விசாரணை அடுத்த செவ்வாய் கிழமைக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

banner

Related Stories

Related Stories