தமிழ்நாடு

மருத்துவ மேற்படிப்புக்கு உத்தரவாத பத்திரம் தேவையா? : அரசுடன் ஆலோசிப்பதாக வழக்கறிஞர் தகவல்!

மருத்துவ மேற்படிப்பில் சேர அரசு உயர் அதிகாரிகளின் உத்தரவாத பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனை குறித்து அரசுடன் விவாதிக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

மருத்துவ மேற்படிப்புக்கு உத்தரவாத பத்திரம் தேவையா? : அரசுடன் ஆலோசிப்பதாக வழக்கறிஞர் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் நடப்புக் கல்வியாண்டில் ( 2019 - 2020 ) மருத்துவ படிப்பிற்கான விளக்கக் குறிப்பை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் வெளியிட்டது.

அந்த குறிப்பேட்டில் மருத்துவ முதுநிலை படிப்பிற்கு ரூ.40 லட்சமும் (PG), மருத்துவ பட்டய மேற்படிப்புக்கு (UG) ரூ.20 லட்சமும் நன்கொடை செலுத்தவேண்டும் எனவும், இரண்டு உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று நிபந்தனை வகுக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சரவணன் பொது நல வழக்கு தொடர்ந்தார். அவர் தொடர்ந்த மனுவில் அவர் தெரிவித்ததாவது," தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் வெளியிட்ட குறிப்பேட்டில் தெரிவித்துள்ளபடி அரசு அதிகாரிகளிடம் இருந்து உத்தரவாதம் பெறுவது கடினமானது. எனவே அந்த நடவடிக்கை இயலாது. இதனால் மாணவர்கள் சேர்க்கை குறையவும் ரத்தாகவும் வாய்ப்பு உள்ளது. எனவே அதில் திருத்தம் கொண்டுவரவேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்த வழக்கு ஜூன் 8-ம் தேதி நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மருத்துவ மேற்படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நபர்களின் முழு விவரத்தையும், தகுதி இருந்தும் புதிய நிபந்தனைகளால் மருத்துவ மேற்படிப்பில் சேர முடியாமல் யாராவது உள்ளார்களா என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், மருத்துவ மேற்படிப்பில் தற்போதுள்ள காலியிடங்கள் குறித்த விவரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மருத்துவ மேற்படிப்புக்கு உத்தரவாத பத்திரம் தேவையா? : அரசுடன் ஆலோசிப்பதாக வழக்கறிஞர் தகவல்!

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பட்டியலை தாக்கல் செய்தார். தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 386 மருத்துவ அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் மருத்துவ மேற்படிப்புக்கு அரசு உயர் அதிகாரிகளிடம் பிரமாண பத்திரம் பெறும் நடைமுறையை கேரளா மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் நடைமுறையில் இருப்பதாக அரசு தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

இறுதியாக, இந்த நிபந்தனையை மாற்றியமைப்பது தொடர்பாக தமிழக அரசுடன் கலந்தாலோசிப்பதாகவும் கூறினார். இதையடுத்து, வழக்கு விசாரணையை ஜூன் 17 ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

banner

Related Stories

Related Stories