
சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் உள்ளாட்சித்தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிச்சாமி, செயலாளர் ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது : "தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் என்று வாக்காளர்கள் பிரிக்கப்படவேண்டும். அதற்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 5.86 கோடி வாக்காளர்களை 1 லட்சத்து19 ஆயிரம் வார்டுகளுக்கு பிரிக்கவேண்டும்.
இவற்றில் மாநகராட்சிக்கு வாக்கு எந்திரம் பயன்படுத்தப்படும் மற்றவற்றிற்கு வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜூலை இரண்டாம் வாரத்திற்குள்ளாக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாராகிவிடும் அதன் பின்னர் வரும் ஆகஸ்டு மாதம் இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தமுறை வி.வி.பேட் இயந்திரம் பயன்படுத்துவது குறித்து தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை" என்று தெரிவித்துள்ளார்.








