தமிழ்நாடு

‘நீ என்ன சாதி..’ என்று கேட்ட கிருஷ்ணசாமி : கேள்விகளால் வறுத்தெடுத்த பத்திரிகையாளர்கள் 

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததை அடுத்து டாக்டர் கிருஷ்ணசாமி, இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பத்திரிகையாளர் ஒருவரிடம், “நீ என்ன சாதி..?” என்று கேட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

‘நீ என்ன சாதி..’ என்று கேட்ட கிருஷ்ணசாமி : கேள்விகளால் வறுத்தெடுத்த பத்திரிகையாளர்கள் 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

2019 நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தது புதிய தமிழகம் கட்சி. இதைத் தொடர்ந்து புதிய தமிழகம் சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி, தென்காசி தனித் தொகுதியிலிருந்து போட்டியிட்டார் அவருக்கு எதிராக தி.மு.க தனுஷ் எம். குமார் களமிறக்கப்பட்டார்.

இவர்கள் இருவருக்கும் இடையில்தான் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தனுஷ் எம்.குமார், 1 லட்சத்து 20 ஆயிரத்து 286 வாக்குகள் வித்தியாசத்தில் கிருஷ்ணசாமியை வீழ்த்தினார். இதுவரை தென்காசி தொகுதியில் கிருஷ்ணசாமி 6 முறை தோல்வியைத் தழுவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் தோல்விக்குப் பின்னர் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு கூட்டம் நடந்தது. கூட்டம் ஆரம்பம்முதல் கடைசி வரை சர்ச்சைக்குரிய கருத்துக்களையே கிருஷ்ணசாமி பேசிவந்தார். அப்போது தன்னிடம் கேள்வி கேட்ட ஒரு பத்திரிகையாளரிடம், “நீ என்ன சாதி..?.. உன்னுடைய கேள்விக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது” என்று காட்டமாகப் பேசினார். இதற்குக் கொதித்து எழுந்த பத்திரிகையாளர்கள் சிலர் கிருஷ்ணசாமியைக் கேள்விகளினால் துளைத்து எடுத்தனர்.

இதுகுறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் கூறுகையில், "15 நிமிடங்கள் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு கூட்டம் முழுவதும் சாதிய வன்மத்துடன் கிருஷ்ணசாமி நடந்துகொண்டார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பு கூட்டம் என்பது, அவர்கள் சொல்லும் கருத்தை மட்டும் கேட்டு பதிவு செய்வது என அறியாத நபர் போல் அவர் நடந்துகொண்டுள்ளார். அவர் தெரிவிக்கும் நன்றியை மக்களிடம் சொல்லும் பொறுப்பு ஊடகத்திற்கு உள்ளது. அதை அடுத்து மக்களின் கருத்துக்கள் அவர் அங்கம் வகிக்கும் கூட்டணி குறித்து கேள்வியெழுப்பும் பொறுப்பும் பத்திரிகையாளர்களுக்கு உண்டு என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும்.

மிகவும் நாகரிகமான முறையில் நிருபர்கள் கேட்டுக்கும் கேள்விகளுக்கு ஆக்ரோஷமான முறையில் பதில் சொல்கிறார் என்றால், அவர் என்ன மனநிலையிலிருந்து நிருபர்களைப் பார்க்கிறார் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. உங்கள் தொகுதியில் நீங்கள் தோல்வி அடைந்த காரணம் பற்றி பரிசீலனை செய்தீர்களா என்றா கேள்விக்கு நீ என்ன ஊர் என்று கேட்கிறார், ஊர் பெயர் சொன்னதும் உன் சாதி என்ன எனக் கேட்கிறார்.

உடனே நிருபர்கள் நீங்கள் பேசுவது தவறானது என்று சொன்னதும், அவர் அருகில் அதுவும் பின்னால் நிற்பவர்கள் தங்களை ஒரு பெரிய இதுவாக நினைத்துக்கொண்டு பத்திரிகையாளரை மிரட்டுகின்றனர். அவர்களைக் கட்டுப்படுத்த கிருஷ்ணசாமி தவறுகிறார். இதன் மூலம் அவர்கள் செயல்களை அவர் ஆதரிக்கிறார் என்றேதான் தெரிகிறது.

அடுத்ததாக நீட், ஹைட்ரோ கார்பன், ஜி.எஸ்.டி என இது எதற்கும் பா.ஜ.க காரணம் அல்ல என அக்கட்சியின் தொண்டரைப்போல கிருஷ்ணசாமி பேசுகிறார். பின்னர் தமிழக பத்திரிக்கையாளர் நெகட்டிவ் செய்திகளை கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர் என்கிறார்.

அவர் பேச்சுக்குப் பத்திரிக்கையாளர் அங்கேயே கண்டனம் தெரிவிக்கின்றனர். ஆனால் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றுக்குள்ளதாகவே இல்லை. மீண்டும் சொல்கிறார் "சாதியைக் கேட்டா என்ன தப்பு .. நீங்கள் சாதி இல்லாமல் தான் இருக்கிறார்களா?”என நாகரிகமற்ற ஒரு மனிதனைப் போல ஒருமையில் பேசுகிறார்.

இதனைப்போன்ற நிகழ்வினை இனி வருங்காலங்களில் அவர் நிறுத்திக்கொள்ளட்டும். அதுவே நாகரிகம். இதுபோன்ற பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்படும்போது அதனைக் காப்பாற்ற ஜனநாயக சக்திகள் ஒருங்கிணையும் என்ற நம்பிக்கையும் உள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.

banner

Related Stories

Related Stories