தமிழ்நாடு

சென்னையில் தண்ணீர் லாரிகள் வருகிற 27ம் தேதி முதல் இயங்காது - அதிர்ச்சியில் மக்கள்!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வருகிற 27-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

சென்னையில் தண்ணீர் லாரிகள் வருகிற 27ம் தேதி முதல் இயங்காது - அதிர்ச்சியில் மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

பருவமழை பொய்த்ததன் காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரங்களான ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்து வந்தது. தற்போது ஏரிகள் முற்றிலும் வறண்டு போக தொடங்கிவிட்டன. இதனால் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது.இதனால் குடிநீருக்காக மக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். தற்போதைய சூழலில் தண்ணீர் லாரிகளே சென்னையின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தவித்து கொண்டிருக்கும் சென்னை மக்களுக்கு இன்னொரு அடி விழுந்திருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் அதிரடியாக வேலைநிறுத்தத்தை அறிவித்து உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.முருகன் கூறியதாவது:-

நிலத்தடி நீரை எடுப்பதை ஏதோ திருட்டு போல அரசு முத்திரை குத்த தொடங்கிவிட்டது. செழிப்பான நிலத்தடி நீர்மட்டம் உள்ள இடங்களில் தண்ணீரை உறிஞ்சி அதை தேவைப்படும் இடங்களுக்கு சென்று மக்களிடம் வினியோகம் செய்கிறோம். இந்த நடைமுறைக்கு முறையான உரிமம் கேட்டு பல ஆண்டுகளாக அரசிடம் கையேந்தி நிற்கிறோம். ஆனால் அரசு பாராமுகமாகவே இருந்து வருகிறது.

‘நீரை கனிம வளத்தில் சேர்த்துவிட்டோம், எனவே அரசு தவிர தனியாருக்கு இந்த உரிமம் தர இயலாது’ என்று அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். நீரை கனிம வளத்தில் சேர்க்கமுடியாது. மலைகளை வெட்டினால் வளராது. ஆனால் மழை பெய்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். தவிர இதுவும் ஒருவகையில் மக்கள் சேவைதான். அதுவும் இந்த சூழ்நிலையில் எங்கள் பணி இன்றியமையாத ஒன்று.

மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் முதற்கட்டமாக வருகிற 27-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்து உள்ளோம். எனவே 27-ந்தேதி முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இயங்கும் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட தனியார் லாரிகள் இயங்காது.

எங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி நிலத்தடி நீரை எடுக்க உரிமம் தரும் பட்சத்தில் எங்கள் போராட்டத்தை கைவிடுவோம். இதுதொடர்பாக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்போதைய சூழலில் தனியார் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தம் பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

banner

Related Stories

Related Stories