தமிழ்நாடு

அரவக்குறிச்சி தொகுதியில் 32 சுற்றுகளாக வாக்கு எண்ணப்படும் - தேர்தல் அதிகாரி தகவல் !

அரவக்குறிச்சி தொகுதி வாக்கு எண்ணும் அறை மிகவும் சிறியதாக உள்ளதால், அத்தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையை 32 சுற்றுகளாக எண்ண முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அரவக்குறிச்சி தொகுதியில் 32 சுற்றுகளாக வாக்கு எண்ணப்படும் - தேர்தல் அதிகாரி தகவல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. இத்தொகுதியில் தி.மு.க.சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட மொத்தம் 63பேர் போட்டியிட்டனர்.

மொத்தமுள்ள 2 லட்சத்து 5ஆயிரத்து 273 வாக்காளர்களில் 1 லட்சத்து 73ஆயிரத்து 115 பேர் வாக்களித்துள்ளனர். இது 84.33 சதவீதம் ஆகும். நேற்று முன்தினம் நடைபெற்ற 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் தான் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது.

அரவக்குறிச்சி தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு எந்திரங்கள் கரூர் தளவாபாளையம் குமாரசாமி என்ஜினீயரிங் கல்லூரியில் உள்ள அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. ஏற்கனவே அங்கு கரூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க.வேட்பாளர் செந்தில்பாலாஜி, கரூர் தளவாப்பாளையம் குமாரசாமி என்ஜினீயரிங் கல்லூரியில் அரவக்குறிச்சி தொகுதி வாக்கு எண்ணும் மையத்திற்காக ஒதுக்கப்பட்ட அறையை ஆய்வு செய்தார். அப்போது அந்த அறை மிகச்சிறியதாக இருந்தது. இதனால் கூடுதல் அறை ஒதுக்க வேண்டும் என்று செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சி தொகுதி நடத்தும் அலுவலர் மீனாட்சியிடம் புகார் மனு கொடுத்தார்.

அந்த புகார் மனுவில், அரவக்குறிச்சி தொகுதியில் மொத்தம் 63 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்தநிலையில் அரவக்குறிச்சி தொகுதி வாக்கு எண்ணும் பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறை மிகச்சிறியதாக உள்ளது. இதனால் அங்கு வேட்பாளர்களின் முகவர்கள், ஊழியர்கள் யாரும் நிற்க முடியாத அளவுக்கு இடப்பற்றாக்குறை உள்ளது. எனவே பெரிய அறையோ அல்லது இடவசதிஉள்ள அறைகளையோ ஒதுக்கி வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான அன்பழகன் தெரிவித்தார்.

இந்தநிலையில் அரவக்குறிச்சி தொகுதிக்கான வாக்கு எண்ணும் அறை மிகவும் சிறியதாக உள்ளதால், அத்தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையை 17 சுற்றுகளில் இருந்து 32 சுற்றுகளாக எண்ண முடிவு செய்யப்பட்டது. மேலும் இடப்பற்றாக்குறை உள்ளதால் வாக்கு எண்ணிக்கைக்கு 14 மேஜைகளுக்கு பதில் 8 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்பட உள்ளது. செந்தில்பாலாஜி புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரி அன்பழகன் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories