தமிழ்நாடு

தமிழகத்தில் விபத்துகள் அதிகம் நடைபெற மோசமான சாலைகளே காரணம் - மதுரை உயர்நீதிமன்றம் கருத்து!

விதிகளை முறையாக பின்பற்றாதது, முறையாக பராமரிக்காத சாலைகள் ஆகியவற்றால் தான் விபத்துகள் அதிகரிக்கின்றன என்று சாலை விபத்தில் கர்ப்பிணி உயிரிழந்த வழக்கில் நீதிபதி கருத்து. 

தமிழகத்தில் விபத்துகள் அதிகம் நடைபெற மோசமான சாலைகளே காரணம் - மதுரை உயர்நீதிமன்றம் கருத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தேனியைச் சேர்ந்த கருப்பசாமியின் மனைவி புஷ்பா, கடந்த 2010, ஆகஸ்ட் 7ஆம் கணவர் மற்றும் மகன் நவீன்ராஜுடன் தேனி - வீரபாண்டி சாலையில் காலை 7.30 மணியளவில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மினிவேன் மோதியதில் 6 மாத கர்ப்பிணியான புஷ்பா உயிரிழந்தார். இதனால் இழப்பீடு வழங்கக் கோரி, கருப்பசாமி, தேனி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், விபத்தை ஏற்படுத்திய வாகனம் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட நிறுவனத்தின் சார்பில் 5 லட்சத்து 34 ஆயிரத்து 360 ரூபாயை இழப்பீடாக வழங்க கடந்த 2012ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சார்பில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன்,"மோட்டார் வாகன சட்டம் கடந்த 1988ல் ஏற்படுத்தப்பட்டது. இதில், இழப்பீடு வழங்கும் பிரிவுகள் தற்போதைய வருவாய், பணமதிப்பு, செலவழிக்கும் திறன் உள்ளிட்டவைக்கு ஏற்றதாக இல்லை. 25 ஆண்டுக்கு மேலாகியும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வராதது, பாதிக்கப்பட்டோருக்கான நீதியை மறுப்பதாகும்.

மோட்டார் வாகன சட்டத்தின் இழப்பீடு வழங்கும் பிரிவுகள் ஒவ்வொரு 3 அல்லது 5 ஆண்டுக்கு ஒருமுறை முறையாக பாராளுமன்றத்தால் திருத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், துரதிஷ்டவசமாக இதுவரை எந்த திருத்தமும் மேற்கொள்ளவில்லை. திருத்தங்கள் மேற்கொள்ள அரசும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து மக்கள் பிரதிநிதிகளும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை. அமெரிக்க நாட்டில் அதிகளவு வாகனங்கள் இருந்தாலும் இந்தியாவில் தான் விபத்துகள் அதிகமாக நடக்கின்றன. விதிகளை முறையாக பின்பற்றாதது, போதிய விழிப்புணர்வு இல்லாதது, முறையாக பராமரிக்காத சாலைகள் ஆகியவற்றால் தான் விபத்துகள் அதிகரிக்கின்றன.

வேலைக்கு செல்லும் பெண்ணாக இருந்தாலும், வீட்டிலிருந்து குடும்பத்தை கவனிக்கும் பெண்ணாக இருந்தாலும் சமமாகவே பார்க்கப்பட வேண்டும். 2 வயது மைனர் குழந்தை தன் தாயை இழந்துள்ளார். குழந்தைக்கு ஏற்பட்ட இழப்பை கடவுளால் கூட ஈடு செய்ய முடியாது. அதேநேரம் விபத்தில் இறந்தவர் 6 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். அந்த சிசுவின் எதிர்காலம் குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டும். சிசுவும் இறந்துள்ளது. எனவே, பலியான பெண்ணின் குடும்பத்திற்கான இழப்பீடு 20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இதில், 12 லட்ச ரூபாயை மைனர் சிறுவன் நவீன்ராஜ் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories