
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் என்பது உலகளவில் மிகவும் புகழ்பெற்ற கிரிக்கெட் போட்டியாக உள்ளது. இதற்கென உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இந்த இரு அணிகளுக்கும் இடையேயான ஆக்ரோசமான ஆட்டத்தைக் காண இன்றளவும் மவுசு உள்ளது என்றே கூறலாம்
டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகப் பழமையான மற்றும் புகழ்பெற்ற தொடரான ஆஷஸ், 1877ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. 2027ஆம் ஆண்டுக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் ஆஷஸ் தொடர்களின் அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு தொடர்களும் ஒரே காலகட்டத்தில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளன. மேலும், வரலாற்றில் முதல்முறையாக மிக்ஸ்டு டிஸபிலிட்டி ஆஷஸ் தொடரும் இதனுடன் இணைந்து நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தத் தொடரின் ஒரு போட்டி அல்லது தொடக்கப் போட்டியினை இந்தியாவில் நடத்துவது குறித்த பேச்சு அடிபட்டுள்ளது.
இதுபற்றி பேசியுள்ள, ஆஸ்திரேலியா (CA) கிரிக்கெட் தலைமை செயல் அதிகாரி டாட் கிரீன்பெர்க், ஆஷஸ் (Ashes) டெஸ்ட் தொடரின் ஒரு போட்டியை இந்தியாவில் நடத்தும் யோசனைக்கு திறந்த மனதுடன் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுபோன்ற திட்டம் தற்போது எதுவும் இல்லை என்றாலும், டெஸ்ட் கிரிக்கெட்டின் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்க அனைத்து வாய்ப்புகளையும் பரிசீலிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

பிபிசியின் Stumped பாட்காஸ்டில் பேசிய கிரீன்பெர்க், “இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (ECB), இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இடையே எங்களுக்கு மிகச் சிறந்த உறவு உள்ளது. தற்போது இதற்கான திட்டம் எதுவும் இல்லை. இருப்பினும், இதுபோன்ற யோசனைகளை பரிசீலிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.
மேலும், ”ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான ஆர்வம் இன்னும் வலுவாக உள்ளது. உலகின் பல பகுதிகளில் டெஸ்ட் கிரிக்கெட் சவால்களை சந்தித்தாலும், குறிப்பிட்ட இந்த மூன்று நாடுகளிலும் அதற்கான வரவேற்பு தொடர்ந்து உள்ளது. அந்த வளர்ச்சியை மேலும் வலுப்படுத்த விரும்புகிறோம்,” என்றார்.
இந்தக் கருத்து, பிக் பாஷ் லீக் (BBL) தொடரின் தொடக்கப் போட்டி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே வெளியாகியுள்ளது. சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் பெர்த் ஸ்கோர்ச்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
அதே நேரத்தில், சர்வதேச கிரிக்கெட் அட்டவணையின் நெருக்கடி குறித்து பேசிய அவர், ஐசிசி தொடர்கள், இருதரப்பு தொடர்கள் மற்றும் உலகம் முழுவதும் நடைபெறும் லீக் தொடர்கள் காரணமாக புதிய போட்டிகளை அட்டவணையில் சேர்ப்பது மிகவும் கடினமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஒரு ஆண்டில் 365 நாட்கள்தான் உள்ளன. ஆனால் உலக கிரிக்கெட்டில் நடத்த வேண்டிய போட்டிகள் அதைவிட அதிகமாக உள்ளன. இன்னும் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் கூடுதலாக இருந்தால் நாங்கள் திட்டமிடும் பல போட்டிகளை நடத்த முடியும் என தெரிவித்துள்ளார்.






