அர்ஜெண்டின கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி ’பிரான்சின் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன்’ என்ற அழைக்கப்படும் PSG கால்பந்து அணிக்காக விளையாடி வந்தார் . PSG அணியுடனான மெஸ்ஸியின் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், அமெரிக்காவின் MLS தொடரில் பங்கேற்கும் இன்டர் மியாமி அணியில் இணையவுள்ளதாக அந்த அணி அதிகாரபூர்வமாக அறிவித்தது.
அதன்படி இன்டர் மியாமி அணியில் இணைந்த அவர், இரண்டு ஆண்டுகளில் மியாமி அணிக்காக இரண்டு கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். மேலும் அதுவரை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த இந்த அணி, கடந்த இரண்டு ஆடுகளில் அமெரிக்காவின் முன்னணி அணியாக உயர்ந்துள்ளது.

இதனிடையே நேற்று நடைபெற்ற MLS league கோப்பையின் Eastern Conference அரையிறுதி போட்டியில் மியாமி அணி சின்சினாட்டி அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் மெஸ்ஸியின் மியாமி அணி சின்சினாட்டி அணியை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.
இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய மெஸ்ஸி ஒரு கோல் அடித்த நிலையில், 3 கோல்கள் அடிக்க உதவினார். இதன் மூலம் மியாமி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலம் உலகிலேயே அதிக அளவு கோல் பங்களிப்பு வழங்கிய வீரர் (1,300 பங்களிப்பு.. 896 கோல்கள் + 404 அசிஸ்ட்ஸ்) என்ற பெருமையை மெஸ்ஸி பெற்றுள்ளார். இறுதிப்போட்டியில் வென்றால் மெஸ்ஸி வந்தபின்னர் அந்த அணி வெல்லும் 3-வது கோப்பையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.






