விளையாட்டு

உலகக்கோப்பை பெற்றுத்தந்த தோனியின் சரித்திர சிக்ஸர்.. விரைவில் ஏலத்துக்கு வரும் பந்து விழுந்த இருக்கைகள் !

தோனி சிக்ஸர் அடித்த பந்து விழுந்த இருக்கைகளை ஏலத்தில் விடமுடிவு செய்துள்ளதாக மும்பை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

உலகக்கோப்பை பெற்றுத்தந்த தோனியின் சரித்திர சிக்ஸர்.. விரைவில் ஏலத்துக்கு வரும் பந்து விழுந்த இருக்கைகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின், கங்குலி-க்கு பிறகு அடுத்து நட்சத்திர வீரராக யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தபோது தனது அமைதியாலும், அதிரடி ஆட்டத்தாலும் அந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தவர்தான் எம்.எஸ்.தோனி. இந்திய அணியில் இப்படி ஒரு வீரரா என பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், சச்சின் அவுட் ஆனால், இந்திய அணி தோற்றுவிடும் என கருதப்பட்ட நிலையையம் மாற்றிக்காட்டினார்.

அதனால் எம்.எஸ்.தோனி களத்திலிருந்தால் அது எவ்வளவு பெரிய ரன்னாக இருந்தாலும் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடி கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையைப் இந்திய ரசிகர்களுக்கு விதைத்தார். அதன்பின்னர் இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.

இவர் தலைமையில் கடந்த 2011 ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் குலசேகரா பந்துவீச்சில் தோனி சிக்ஸர் விலாசி இந்தியா உலகக்கோப்பையை வென்ற அந்த தருணமே இந்திய ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணமாக இருந்து வருகிறது.

அந்த வரலாற்று சிக்சரை கவுரவிக்கும் விதத்தில் தோனியின் சிக்சர் விழுந்த குறிப்பிட்ட இடத்தை ஒட்டியுள்ள, 4 அல்லது 5 இருக்கைகளை மும்பை கிரிக்கெட் வாரியம் நினைவிடமாக மாற்றியது. இந்த நிலையில் அந்த நினைவிடமாக மாற்றப்பட்ட அந்த இருக்கைகளை ஏலத்தில் விடமுடிவு செய்துள்ளதாக மும்பை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து மும்பை கிரிக்கெட் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், இந்த ஏலத்தில் இருந்து சேகரிக்கப்படும் நிதி, வளர்ந்து வரும் வீரர்களுக்கு உதவித்தொகையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் விரைவில் இந்த ஏலம் குறித்த முழு விவரங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கபட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories