விளையாட்டு

புதிய கிளப்க்கு முதல் கோப்பையை பெற்றுக்கொடுத்த Messi.. அதிக கோல் அடித்த வீரருக்கான விருதை வென்று அசத்தல்!

மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி நாஷ்வில்லே அணியை வீழ்த்தி முதல் முறையாக லீக்ஸ் கோப்பையை வென்றது.

புதிய கிளப்க்கு முதல் கோப்பையை பெற்றுக்கொடுத்த Messi.. அதிக கோல் அடித்த வீரருக்கான விருதை வென்று அசத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

அர்ஜெண்டின கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி ’பிரான்சின் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன்’ என்ற அழைக்கப்படும் PSG கால்பந்து அணிக்காக விளையாடி வந்தார் . PSG அணியுடனான மெஸ்ஸியின் ஒப்பந்தம் இந்தாண்டோடு முடிவடையும் நிலையில், அடுத்ததாக அவர் தொடர்ந்து PSG அணியில் தொடருவாரா அல்லது வேறு அணிக்கு செல்வாரா என்ற கேள்வி எழுந்தது. அதிலும் ரொனால்டோ ஆடும் சவுதி லீக்கின் அல் நாசர் அணியின் போட்டி கிளப்பான அல் ஹிலால் ரொனால்டோவை விட அதிக தொகைக்கு மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய தயாராக இருப்பதாக கூறப்பட்டது.

மேலும், மெஸ்ஸி நீண்ட நாள் ஆடிய பார்சிலோனா கால்பந்து கிளப் மீண்டும் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய தயாராக இருப்பதாகவும், அந்த அணியோடு மெஸ்ஸியின் மேலாளரும் தந்தையுமான ஜோர்ஜே பேசி வருவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அந்த செய்திகளை பார்சிலோனா கால்பந்து கிளப்பின் தலைவர் ஜோன் லபோர்டா மறுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து மெஸ்ஸி PSG கிளப்பில் இருந்து விலகுவதில் உறுதியாக உள்ளார் என்றும், இதன் காரணமாக இந்த சீசன் முடிந்ததும் அவர் PSG கிளப்பில் இருந்து விலகுவார் என்றும் PSG அணியில் பயிற்சியாளர் கிறிஸ்டோஃப் கால்டியர் அறிவித்தார். இதன் காரணமாக மெஸ்ஸி அடுத்து எந்த கால்பந்து அணியில் இணைவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் இருந்த நிலையில் மெஸ்ஸி அமெரிக்காவின் MLS தொடரில் பங்கேற்கும் இன்டர் மியாமி அணியில் இணையவுள்ளதாக அந்த அணி அதிகாரபூர்வமாக அறிவித்தது.

புதிய கிளப்க்கு முதல் கோப்பையை பெற்றுக்கொடுத்த Messi.. அதிக கோல் அடித்த வீரருக்கான விருதை வென்று அசத்தல்!

அதன் படி தற்போது இன்டெர் மியாமி அணிக்காக லீக்ஸ் கோப்பை தொடரில் மெஸ்ஸி பங்கேற்றார். அந்த அணிக்காக ஆடிய முதல் போட்டியிலேயே கோல் அடித்து அந்த அணியை வெற்றிபெற வைத்த மெஸ்ஸி, பிலதெல்பியா அணியை வீழ்த்தி இன்டர் மியாமி அணி முதல் முறையாக லீக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேற காரணமாக இருந்தார்.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், இன்டர் மியாமி அணி நாஷ்வில்லே அணியை எதிர்கொண்டது. இதில் ஆட்டத்தின் 23-வது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் அடித்து அணிக்கு முன்னிலையை ஏற்படுத்தி கொண்டார், எனினும் ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் நாஷ்வில்லே அணி பதில் கோல் அடித்தது. பின்னர் இறுதிவரை இருஅணிகளும் கூடுதல் கோல் அடிக்காத நிலையில், ஆட்டம் பெனால்டி சூட்அவுட்க்கு சென்றது.

இதில் 10-9 என்ற கணக்கில் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி நாஷ்வில்லே அணியை வீழ்த்தி முதல் முறையாக லீக்ஸ் கோப்பையை வென்றது. இந்த தொடரில் 10 கோல் அடித்து தொடரில் அதிக கோல் அடித்த வீரராக திகழ்ந்த மெஸ்ஸி அதற்கான விருதை வென்றதோடு ஆட்ட நாயகன் விருதையும் வென்று அசத்தினார். அதோடு இந்த தொடரில் இன்டர் மியாமி அணிக்காக அதிக கோல் அடித்த வீரராகவும் மாறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories