விளையாட்டு

IPL2022 : பொறுப்பை ஏற்கும் ஹீரோக்கள்; துணிச்சலான அணுகுமுறை; குஜராத் டைட்டன்ஸின் சக்சஸ் சீக்ரெட்!

கேப்டனாக மற்ற வீரர்களை மேலும் ஊக்குவித்து நல்ல ரிசல்ட்டை தன்னால் பெற முடியும் என்பதையும் ஹர்திக் பாண்ட்யா நிரூபித்துக் காட்டினார்.

IPL2022 : பொறுப்பை ஏற்கும் ஹீரோக்கள்; துணிச்சலான அணுகுமுறை; குஜராத் டைட்டன்ஸின் சக்சஸ் சீக்ரெட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் நேற்று நடந்திருந்தது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் நல்ல வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி முதல் அணியாக அதிகாரப்பூர்வமாக ப்ளே ஆஃப்ஸூக்கு தகுதிப்பெற்றிருக்கிறது.

குஜராத் அணி இந்த சீசனில்தான் ஐ.பி.எல் க்கு அறிமுகமாகியிருந்தது. மெகா ஏலம் முடிந்த சமயத்தில் ரொம்பவே சுமாரான ஒரு அணியாக பார்க்கப்பட்டது. On paper லியே பல ஓட்டைகளை கொண்ட அணியாக பார்க்கப்பட்டது. மேலும் அந்த அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த முடிவும் அவ்வளவு நல்ல முடிவாக பார்க்கப்படவில்லை.

கொஞ்சம் எகத்தாளமான அட்டிடியுடை கொண்ட ஹர்திக் பாண்ட்யாவால் ஒரு அணியை சச்சரவுகள் இன்றி கட்டி மேய்த்து வழிநடத்த முடியுமா? என்றெல்லாம் சந்தேகம் எழுப்பப்பட்டது. ஆனால், இந்த சீசன் தொடங்கிய பிறகு எல்லாம் தலைகீழாக மாறியது. முதல் மூன்று போட்டிகளையுமே குஜராத் அணி சிறப்பாக வென்றது. எந்த அணியும் முதல் மூன்று போட்டிகளை வெல்லவே இல்லை. குஜராத் மட்டுமே அத்தனை சிறப்பான தொடக்கத்தை பெற்றிருந்தது. கேப்டனாக மற்ற வீரர்களை மேலும் ஊக்குவித்து நல்ல ரிசல்ட்டை தன்னால் பெற முடியும் என்பதையும் ஹர்திக் பாண்ட்யா நிரூபித்துக் காட்டினார்.

குஜராத்தின் வெற்றி ரகசியம்தான் என்ன? முதல் விஷயம் அந்த அணி ரிஸ்க் எடுப்பதற்கு தயாராக இருக்கிறது. குஜராத் அணியிடம் மிடில் ஆர்டர் பேட்டிங்கே கிடையாது. ஓப்பனிங்கில் கில், சஹா போன்றவர்கள் ஆட நம்பர் 3 இல் விஜய் சங்கர் அல்லது சாய் சுதர்சன் ஆடிக்கொண்டிருந்தனர். இதன்பிறகு மில்லர், ஹர்திக் பாண்ட்யா, ராகுல் திவேதியா, ரஷீத்கான் என அத்தனை பேரும் கீழ் வரிசையில் ஆடக்கூடியவர்கள். இந்த சமயத்தில்தான் ஹர்திக் பாண்ட்யா ஒரு ரிஸ்க்கை எடுத்தார். இதுவரை தனது கரியரில் கீழ் வரிசையில் மட்டுமே ஆடி வந்த ஹர்திக் முதல் முறையாக தன்னை நம்பர் 4 க்கு ப்ரமோட் செய்து கொண்டார். தான் இதுவரை ஆடியதற்கு அப்படியே நேரெதிரான ஒரு இடம். நேரெதிரான ஒரு கதாபாத்திரம். ஆனாலும் அதை ஹர்திக் மிகச்சிறப்பாக செய்திருக்கிறார். 11 போட்டிகளில் 344 ரன்களை 131 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருக்கிறார்.

டி20 போட்டிகள் என்பது ஒரே பந்தில் ஒரே ஓவரில் ஆட்டம் அப்படியே தலைகீழாக மாறக்கூடிய தன்மையுடையது. ஆட்டத்தையே தலைகீழாக மாற்றும் அந்த ஒரு ஓவரை எந்த அணி அதிகமாக ஏற்படுத்துகிறதோ அந்த அணி அதிக போட்டிகளை வெல்லும். குஜராத் அணியில் அப்படியான ஓவர்களை நிகழ்த்திக் காட்ட எக்கச்சக்கமான வீரர்கள் இருக்கின்றனர். ஒரு போட்டியை மில்லர் கடைசி வரை நின்று அசாத்தியங்களை நிகழ்த்தி வெல்ல வைக்கிறார். ஒரு போட்டியை திவேதியா சாகசங்களை நிகழ்த்தி வெல்ல வைக்கிறார். ஒரு போட்டியை ரஷீத்கான் துணிச்சலாக முன் வந்து அந்த வியப்புக்குரிய வகையில் உண்டாக்குகிறார். மொத்தத்தில் மேட்ச் வின்னர்கள் நிறைந்த ஒரு அணியாக இருக்கிறது.

ரிஸ்க் எடுப்பதற்கு எப்போதும் அஞ்சுவதே இல்லை. ஹர்திக் பாண்ட்யா காயமடைந்த போது அவருக்கு பதில் ஒரு பேட்ஸ்மேனை எடுக்காமல் கூடுதலாக ஒரு பௌலரை எடுத்து, ஒரு பேட்ஸ்மேனை குறைவாக வைத்துக் கொண்டு சில போட்டிகளில் ஆடினார். ஹர்திக்கிற்கு பதில் ரஷீத்கான் கேப்டன் ஆகினார். அப்படியிருந்தும் குஜராத் அணி போட்டிகளை வென்றது.

இந்த சீசனை உற்றுக்கவனித்தால் ஒரு விஷயம் புரிய வரும். பௌலிங்கில் எந்த அணி வலுவாக இருக்கிறதோ அவர்கள்தான் புள்ளிப்பட்டியலில் டாப் இடங்களை ஆக்கிரமித்திருக்கின்றனர். குஜராத் அணி பௌலிங்கிலும் கெட்டியாக இருக்கிறது. ஷமி, பெர்குசன், ரஷீத்கான் ஆகியோர் சிறப்பாக வீச புதிதாக அணிக்குள் வந்த யாஷ் தயாளும் சிறப்பாக வீசி வருகிறார். ஏலத்தில் பௌலர்களுக்கு மட்டுமே 40 கோடியை குஜராத் செலவளித்திருந்தது. 10 போட்டிகளாக பென்ச்சில் இருந்துவிட்டு 11 வது போட்டியில் களமிறங்கி முதல் ஓவரிலேயே விக்கெட் எடுக்கிறார் தமிழக வீரர் சாய் கிஷோர்.

இப்படியாக பென்ச்சிலும் எக்கச்சக்க நல்ல பௌலிங் ஆப்சன்களை குஜராத் வைத்திருக்கிறது. லக்னோவிற்கு எதிரான நேற்றைய போட்டியில் 144 ரன்களை டிஃபண்ட் செய்து 82 ரன்களுக்கு லக்னோவை ஆல் அவுட் ஆக்கியிருக்கின்றனர். இதுதான் குஜராத்தின் பந்துவீச்சு பலத்திற்கான சாட்சி.

குஜராத் முழுமையான ஒரு பெர்ஃபெக்ட்டான அணி கிடையாது. ஆனால், அவர்களால் தங்களிடம் இருப்பில் இருக்கும் வளங்களின் மூலம் முழு பலனையும் அறுவடை செய்ய முடிகிறது. இதுதான் அவர்களின் வெற்றி ரகசியம்.

banner

Related Stories

Related Stories