விளையாட்டு

IPL 2022 : தோல்விக்கு காரணமான டெத் ஓவர்கள்.. தொடரை விட்டு வெளியேறுகிறதா சென்னை? CSK vs RCB

ஏறக்குறைய தோல்வி உறுதியாகிவிட்ட சூழலிலேயே பிரயோஜனமின்றி 17 ரன்களை சென்னை எடுத்திருந்தது.

IPL 2022 : தோல்விக்கு காரணமான டெத் ஓவர்கள்.. தொடரை விட்டு வெளியேறுகிறதா சென்னை? CSK vs RCB
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. ப்ளே ஆஃப்ஸூக்கு செல்ல வேண்டுமெனில் இருக்கிற அத்தனை போட்டிகளையும் வெல்ல வேண்டிய சூழலில் சென்னை அணி பெங்களூருவிற்கு எதிரான இந்த போட்டியை 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது.

174 ரன்களை சென்னை அணி சேஸ் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், சென்னை அணியால் 160 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. கிட்டத்தட்ட 15 ஓவர்கள் வரைக்குமே ஆட்டம் சென்னை அணியின் கட்டுக்குள்தான் இருந்தது. கடைசி 5 ஓவர்களில்தான் பெங்களூரு மிகச்சிறப்பாக செயல்பட்டு சென்னை அணியை திணறவிட்டு வென்றது.

கடைசி 5 ஓவர்களில் சென்னை அணியின் வெற்றிக்கு 56 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், சென்னை அணியோ 4, 5, 8, 8, 17 என்றே கடைசி 5 ஓவர்களில் ஸ்கோர் செய்தது. 16-19 இந்த 4 ஓவர்களில் 25 ரன்களை மட்டுமே சென்னை எடுத்திருந்தது. கடைசி ஓவரில் 31 ரன்கள் தேவை. ஏறக்குறைய தோல்வி உறுதியாகிவிட்ட சூழலிலேயே பிரயோஜனமின்றி 17 ரன்களை சென்னை எடுத்திருந்தது.

சென்னை அணியின் தோல்விக்கு காரணமான அந்த 4 ஓவர்களில் ஹேசல்வுட், ஹர்சல் படேல் ஆகியோர் தலா இரண்டு ஓவர்களை வீசியிருப்பர். ஹர்சல் படேல் 2 ஓவர்களில் 12 ரன்களை மட்டுமே கொடுத்து ஜடேஜா மற்றும் மொயீன் அலியின் விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார். ஹேசல்வுட் 2 ஓவர்களில் 13 ரன்களை கொடுத்து முக்கியமான தோனியின் விக்கெட்டை வீழ்த்தியிருப்பார்.

பெங்களூரு அணியை பொறுத்த வரைக்கும் இந்த சீசனில் அவர்களின் டெத் ஓவர் பௌலிங் ரொம்பவே மோசமாகவே இருந்திருக்கிறது. இந்த சீசனிலேயே டெத் ஓவரில் மிக அதிக எக்கானமி வைத்திருக்கும் அணிகளில் பெங்களூரு டாப்பில் இருந்தது. அப்படி ஒரு அணிக்கு எதிராக சென்னை டெத் ஓவர்களில் சொதப்பியதுதான் பிரச்சனை. ருத்துராஜ் + கான்வே ஒரு அரைசத பார்ட்னர்ஷிப்போடு ஓப்பன் செய்திருந்தார்கள். கான்வே நின்று பெரிய இன்னிங்ஸ் ஆடியிருந்தார். மிடில் ஆர்டரில் மொயீன் அலி கணிசமான பங்களிப்பை வழங்கியிருந்தார். இத்தனையும் சரியாக நிகழ்ந்த பிறகும் கடைசிக்கட்டத்தில் ஒரு 4 ஓவர்களில் சொதப்பியதால் தோற்றது ஏமாற்றம்தான்.

பௌலிங்கின் போதுமே டெத் ஓவரில் சென்னை அணி கொஞ்சம் சறுக்கியிருந்தது. ப்ரெட்டோரியஸ் வீசிய 18 வது ஓவரில் 18 ரன்களை கொடுத்திருந்தார். அவர் வீசிய கடைசி ஓவரில் 16 ரன்களை கொடுத்திருந்தார். லோம்ரோர், தினேஷ் கார்த்திக் போன்றோர் ப்ரெட்டோரியஸின் ஓவர்களில் வைத்து வெளுத்தெடுத்துவிட்டனர். கடைசி 5 ஓவர்களில் பெங்களூருவிற்கு இரண்டு பெரிய ஓவர்கள் கிடைத்திருந்தது.

ஆனால், சென்னைக்கோ ஒரு பெரிய ஓவர் அதுவும் கடைசி ஓவராக நம்பிக்கையிழந்த பிறகே கிடைத்திருந்தது. பெங்களூருவிற்கு கிடைத்ததை போன்று சென்னைக்கு கூடுதலாக ஒரு பெரிய ஓவர் கிடைத்திருக்க வேண்டும் அல்லது பெங்களூருவிற்கு அந்த இரண்டு ஓவர்களில் ஒரு ஓவரை கொடுக்காமல் சென்னை தவிர்த்திருக்க வேண்டும். சென்னை 13 ரன்கள் என்ற குறுகிய வித்தியாசத்தில் தோற்கும்போது இந்த ஒன்றிரண்டு ஓவர்கள்தான் பிரச்சனையாக அமைந்ததாக தெரிகிறது.

இந்த தோல்வியோடு சென்னை அணியின் ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்புகளும் ஏறக்குறைய முடிவுக்கு வருவதாகவே தெரிகிறது. அரிதினும் அரிதாக சில வாய்ப்புகள் இருந்தாலும் அவையெல்லாம் எதாவது அதிசயங்கள் நிகழ்ந்தால் மட்டுமே சாத்தியப்படும்.

banner

Related Stories

Related Stories