விளையாட்டு

IPL 2022 : ஆட்டத்தை வென்று கொடுத்தது தோனி மட்டுமா? ப்ரெட்டோரியஸ் அடித்த அந்த சிக்ஸர்.. CSK vs MI

அபாயகரமான பும்ராவின் ஓவரில் ப்ரெட்டோரியஸ் அடித்த இந்த இரண்டு பவுண்டரிக்கள், கடைசி ஓவரில் தோனியின் கைக்குள் அடங்கும் அளவுக்கான சவாலை ஏற்படுத்த மிக முக்கிய காரணமாக அமைந்தது.

IPL 2022 : ஆட்டத்தை வென்று கொடுத்தது தோனி மட்டுமா?  ப்ரெட்டோரியஸ் அடித்த அந்த சிக்ஸர்.. CSK vs MI
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றிருக்கிறது. மகேந்திர சிங் தோனி கடைசி ஓவரில் 16 ரன்களை அடித்து அணியை வெல்ல வைத்திருக்கிறார்.

உனத்கட் வீசிய அந்த கடைசி ஓவரில் 4 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற சூழலில் தோனி ஒரு சிக்சரையும் இரண்டு பவுண்டரிக்களையும் அடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார். இத்தனை வயதுக்கு பிறகும் தோனி ஒரு ஆட்டத்தை இவ்வளவு சிறப்பாக முடித்து வைத்ததை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அதெல்லாம் சரிதான். ஆனால், தோனி கொண்டாடப்படும் அளவுக்கே ப்ரெட்டோரியஸும் கொண்டாடப்பட வேண்டும். ஏனெனில், அவர்தான் தோனி கடைசி ஓவரில் ஆட்டத்தை முடித்துக் கொடுப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.

ப்ரெட்டோரியஸ் 14 பந்துகளில் 22 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 157. இரண்டு பவுண்டரிக்களையும் ஒரு சிக்சரையும் அடித்திருந்தார். கடைசி ஓவரில் தோனி அடித்த இரண்டு பவுண்டரிக்களும் ஒரு சிக்சரும் எப்படி கொண்டாடப்படுகிறதோ அப்படியேத்தான் இவையும் கொண்டாடப்பட வேண்டும். உனத்கட் வீசிய 18 வது ஓவரில் ப்ரெட்டோரியஸ் ஒரு சிக்சரை பறக்கவிட்டிருப்பார்.

அதற்கு முந்தைய 21 பந்துகளில் சென்னை அணி ஒரு பவுண்டரியை கூட அடித்திருக்கவில்லை. தேவைப்படும் ரன்ரேட்டின் விகிதம் 8 லிருந்து 12 வரை உயர்ந்ததற்கு இந்த 21 பந்துகள் மிக முக்கிய காரணமாக இருந்தது. நிலைமை இன்னும் மோசமாகி ரன்ரேட் இன்னும் ஏறி அழுத்தம் கொடுப்பதற்குள் ப்ரெட்டோரியஸ் அந்த சிக்சரை பறக்கவிட்டிருந்தார்.

அதேமாதிரி, பும்ரா வீசிய 19 வது ஓவரும் ரொம்பவே முக்கியம். ஒரு அணி 19 வது ஓவரை எப்படி எதிர்கொள்கிறதோ அதைப்பொறுத்துதான் 20 வது ஓவரில் அந்த அணிக்கான சவால் நிர்ணயிக்கப்படும். பந்துவீசும் அணிக்கும் இதேதான். 19 வது ஓவரில் எதிரணியை நன்றாக கட்டுப்படுத்தினால், 20 வது ஓவர் வீசும் பௌலர் இன்னும் சௌகரியமாக வீசலாம். இதனால்தான் 19 வது ஓவரை மிகச்சிறந்த ஒரு பௌலருக்கு கொடுப்பார்கள். இதன்படிதான் ரோஹித் சர்மாவும் நேற்று அந்த 19 வது ஓவரை பும்ராவுக்கு கொடுத்திருந்தார்.

தோனி அல்லது ப்ரெட்டோரியஸின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் அல்லது மிகக்குறைவான ரன்களை கொடுக்க வேண்டும் என்பதே பும்ராவின் திட்டம். ஆனால், அதை ப்ரெட்டோரியஸ் முறியடித்திருந்தார். பும்ரா வீசிய இந்த ஓவரில் மட்டும் 11 ரன்கள் சென்னை அணிக்கு கிடைத்திருந்தது. இதில் இரண்டு பவுண்டரிக்களோடு ப்ரெட்டோரியஸ் 10 ரன்களை அடித்திருந்தார். பும்ரா யார்க்கர்களாக வீச முயல, அதை சமாளித்து ப்ரெட்டோரியஸ் பவுண்டரிக்களை அடித்தது சிறப்பாக அமைந்தது.

ஒரு யார்க்கரை நேராக லாங் ஆன் மற்றும் லாங் ஆஃப் ஃபீல்டர்களுக்கு நடுவே பவுண்டரியாக்கியிருப்பார். இன்னொரு பந்தில் பும்ரா யார்க்கரை தவறவிட்டு ஃபுல் டாஸாக வீச அதை முன்பே கணித்து ரேம்ப் ஷாட்டாக ஆடி ஃபைன் லெக்கில் ஒரு பவுண்டரியை அடித்திருந்தார். அபாயகரமான பும்ராவின் ஓவரில் ப்ரெட்டோரியஸ் அடித்த இந்த இரண்டு பவுண்டரிக்கள், கடைசி ஓவரில் தோனியின் கைக்குள் அடங்கும் அளவுக்கான சவாலை ஏற்படுத்த மிக முக்கிய காரணமாக அமைந்தது.

ஆக, தோனியின் அந்த கடைசி ஓவர் சாகசம் மட்டுமில்லை; ப்ரெட்டோரியஸ் அந்த கடைசி ஓவரின் சவாலை குறைக்க ஆடிய ஆட்டம் கொண்டாடத்தக்கதுதான்.

banner

Related Stories

Related Stories