விளையாட்டு

#IPL2022: 6 போட்டியில் 5 தோல்வி - ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பு இழக்கும் சென்னை அணி? - CSK தோல்விக்கு என்ன காரணம்?

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டியில் குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பரபரப்பாக வென்றிருக்கிறது.

#IPL2022: 6 போட்டியில் 5 தோல்வி - ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பு இழக்கும் சென்னை அணி? - CSK தோல்விக்கு என்ன காரணம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியை குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பரபரப்பாக வென்றிருக்கிறது. 17 வது ஓவர் வரை சென்னை அணியின் கையிலிருந்த போட்டி கடைசி 3 ஓவர்களில் குஜராத் பக்கமாக மாறிப்போனது.

குஜராத் அணியின் வழக்கமான கேப்டனான ஹர்திக் பாண்ட்யாவிற்கு காயம் ஏற்பட்டிருப்பதால் அவருக்கு பதிலாக ரஷீத்கான் அந்த அணிக்கு கேப்டனாகியிருந்தார். அவர்தான் டாஸையும் வென்று சேஸ் செய்யப்போவதாக அறிவித்தார்.

சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணியின் பேட்டிங்கில் ஹைலைட்டாக அமைந்தது ருத்துராஜ் கெய்க்வாட்டின் ஆட்டம்தான். முதல் 5 போட்டிகளிலும் தடுமாற்றமாக தொடங்கி சொதப்பலாக அவுட் ஆகியிருந்த ருத்துராஜ் கெய்க்வாட், இந்த போட்டியில் மீண்டும் தனது பழைய ஃபார்மிற்கு திரும்பியிருந்தார். 48 பந்துகளில் 73 ரன்களை அடித்து பிரமாதப்படுத்தியிருந்தார். ருத்துராஜ் எப்போதுமே மெதுவாக தொடங்கி ஆட்டம் செல்ல செல்லவே வேகமெடுப்பார். முதல் 10 பந்துகளில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 100 க்கு நெருக்கமாகத்தான் இருக்கும். அடுத்த 10 பந்துகளில் ஸ்ட்ரைக் கொஞ்சம் எகிறும். 20 பந்துகளுக்கு மேல் சென்று 30 ரன்களுக்கு மேல் எடுத்துவிட்டால் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 190 க்கும் அதிகமாக சென்று விடும். இதே பாணியிலான ஆட்டத்தைதான் இங்கேயும் ஆடியிருந்தார்.

தொடக்கத்தில் நின்று செட்டில் ஆகி மெதுவாக தொடங்கிவிட்டு, பின் ஆட்டம் செல்ல செல்ல ஃபெர்குசன், யாஷ் தயாள், அல்சாரி ஜோசப் ஆகியோரின் பந்துகளில் பிறுத்தெடுத்தார். அரைசதத்தை கடந்தவர் 43 பந்துகளில் 78 ரன்களை அடித்து யாஷ் தயாளின் பந்திலேயே கேட்ச்சும் ஆகியிருந்தார். ருத்துராஜ் கெய்க்வாட் க்ரீஸில் இருந்த வரைக்கும் சென்னை அணியின் ரன்ரேட் க்ராஃப் உயர்ந்துக்கொண்டே இருந்தது. அவர் அவுட் ஆன பிறகு சென்னை அணியின் வேகம் வெகுவாக குறைந்தது. 15-19 அதிரடியாக ஆட வேண்டிய இந்த கட்டத்தில் வெறும் 27 ரன்களை மட்டுமே அடித்திருந்தனர். இதனால் 200 ஐ நெருங்க வேண்டிய சென்னையின் ஸ்கோர் வெகுவாக குறைந்தது. ஆறுதலாக கடைசி ஓவரில் ஜடேஜா சில சிக்சர்களை பறக்கவிட, சென்னையின் ஸ்கோர் 169 ஆக உயர்ந்தது.

குஜராத்திற்கு டார்கெட் 170. அந்த அணிக்காக அதிக ரன்களை அடித்திருந்த வீரர் ஹர்திக் பாண்ட்யாதான். நம்பர் 4 இல் இறங்கி அணியின் முதுகெலும்பாக ஆடியிருந்தார். இந்த போட்டியில் அவர் இல்லை. அவருக்கு பதிலாக ஒரு பேட்ஸ்மேனை எடுக்காமல் பௌலருடனே குஜராத் களமிறங்கியிருந்தது. ஆக, ஒரு பேட்ஸ்மேன் குறைவாகத்தான் குஜராத் களமிறங்கியது. அந்த அணிக்கு நல்ல தொடக்கமும் அமையவில்லை. அதிர்ஷ்டவசமாக கடந்த போட்டியில் வெளிக்காட்டிய நல்ல ஃபார்மையே இந்த போட்டியிலும் சென்னை பௌலர்கள் பவர்ப்ளேயில் தொடர்ந்திருந்தனர்.

பவர்ப்ளேயில் மட்டும் மஹீஸ் தீக்சனாவும் முகேஷ் சவுத்ரியும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். முக்கியமான வீரரான சுப்மன் கில், விஜய் சங்கர் இருவருமே டக் அவுட் ஆகியிருந்தனர். சஹா 11 ரன்னில் அவுட் ஆகியிருந்தார். ஒரு பேட்ஸ்மேன் குறைவாக ஆடி, மோசமான தொடக்கத்தை பெற்ற போதும் குஜராத் அணி 1 பந்தை மீதம் வைத்து டார்கெட்டை சேஸ் செய்து முடித்திருக்கிறது. காரணம், டேவிட் மில்லர். 'கில்லர்' மில்லர் எனும் அடைமொழிக்கு ஏற்றவாறு அற்புதமாக ஆடினார்..ஒரு முனையில் விக்கெட்டுகள் வரிசையாக விழுந்த போதும் இன்னொரு முனையில் விக்கெட்டை காத்து நின்று ஏதுவான பந்துகளை பவுண்டரிக்களும் ஆக்கி போட்டியை கடைசி வரை உயிர்ப்போடு கொண்டு சென்றிருந்தார்.

மில்லர் என்னதான் போராடியிருந்தாலும் அந்த 17 வது ஓவர் முடியும் வரை ஆட்டம் சென்னையின் கையில்தான் இருந்தது. அந்த 18 வது ஓவர் அதுதான் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றியது. அந்த ஓவருக்கு முன்பு 3 ஓவர்களில் 48 ரன்கள் அதாவது ஓவருக்கு 16 ரன்கள் என்ற விகிதத்தில் குஜராத்திற்கு தேவைப்படும் ரன்ரேட் இருந்தது. இந்நிலையில்தான் அந்த 18 வது ஓவரில் க்றிச் ஜோர்டன் 25 ரன்களை வாரி வழங்கினார். ரஷீத்கான் சிக்சரும் பவுண்டரியுமாக அடுத்து வெளுத்தார். அப்படியிருந்தும் 19 வது ஓவரை ப்ராவோ கொஞ்சம் சிக்கனமாகவே வீசி ரஷீத்கானின் விக்கெட்டையும் எடுத்து முடித்து கடைசி ஓவருக்கு இடம் ஏற்படுத்திக் கொடுத்தார்.

கடைசி ஓவரில் குஜராத்தின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை. இந்த சூழலில் மொயீன் அலி, ஜடேஜா, முகேஷ் சவுத்ரி, ஜோர்டன் ஆகியோருக்கு ஓவர் இருநதது. கடைசி ஓவரை ஸ்பின்னர்களுக்கு கொடுக்க தயக்கம் காட்டியதால் சிஎஸ்கே முன்பு இரண்டு வாய்ப்புகள் இருந்தது. ஒன்று இளம் வீரரான முகேஷ் சவுத்ரிக்கு கொடுக்க வேண்டும். இன்னொன்று அனுபவ வீரரான ஜோர்டன், ஆனால் அவர் முந்தைய ஓவரில் 25 ரன்களை கொடுத்திர்ருக்கிறார். இருவரில் ஒருவரை சென்னை தேர்ந்தெடுக்க வேண்டும்.

சென்னையோ அனுபவத்தை முன்வைத்து ஜோர்டனை தேர்ந்தெடுத்தது. 18 வது ஓவரில் யார்க்கராக முயன்று சரியாக விழாமல் சொதப்பியதிலிருந்து ஜோர்டன் பாடம் படித்திருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜோர்டன் அப்படியில்லை. அந்த கடைசி ஓவரிலும் யார்க்கருக்குதான் முயல்வேன் என ஒற்றைக்காலில் நின்று, அது சரியாக அமையாமல் நோ-பாலெல்லாம் விழவே ஒரு பந்தை மீதம் வைத்து மில்லர் குஜராத்தை வெல்ல வைத்தார்.

6 வது போட்டியில் சென்னை அணியின் 5 வது தோல்வி இது. இன்னும் ஒரு போட்டியில் தோற்றாலே சென்னை அணியின் ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பு பறிபோய்விடும் சூழல் இருக்கிறது

banner

Related Stories

Related Stories