விளையாட்டு

பெங்களூருவை துவம்சம் செய்த சென்னை.. வெற்றிப்பாதைக்கு திரும்பியது எப்படி? - இந்த ஃபார்ம் தொடருமா? #IPL2022

சென்னை அணி எதிர்பார்த்த அந்த முதல் வெற்றி பெங்களூருவிற்கு எதிரான போட்டியில் கிடைத்திருக்கிறது.

பெங்களூருவை துவம்சம் செய்த சென்னை.. வெற்றிப்பாதைக்கு திரும்பியது எப்படி? - இந்த ஃபார்ம் தொடருமா? #IPL2022
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நடப்பு சீசனில் சென்னை அணி ஆடியிருந்த முதல் 4 போட்டிகளிலுமே தோல்வியை தழுவியிருந்தது. ஐ.பி.எல் வரலாற்றிலேயே சென்னை அணி இவ்வளவு மோசமாக ஒரு சீசனை தொடங்கியதே இல்லை. இதனால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்படும் சூழல் எல்லாம் உருவானது. ஒரு வெற்றிக்காக சென்னை அணி ஏக்கத்தோடு காத்திருந்தது. சென்னை அணி எதிர்பார்த்த அந்த முதல் வெற்றி பெங்களூருவிற்கு எதிரான போட்டியில் கிடைத்திருக்கிறது. 23 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தி சென்னை அணி முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.

சென்னை அணி வெற்றி பெற்றதற்கு இரண்டு விஷயங்கள் மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தது. முதலில் பேட்டிங்கில் சிவம் துபே மற்றும் உத்தப்பா அமைத்த அந்த பார்ட்னர்ஷிப். சென்னையைப் பொறுத்தவரை பேட்டிங்கில் ஒரு நல்ல தொட்டக்கம் கிடைக்காதது அந்த அணிக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது. குறிப்பாக, சென்னை அணி அதிகமாக நம்பியிருக்கும் ருத்துராஜ் கெய்க்வாட் தொடர்ந்து சொதப்பு பெரிய தலைவலியாக இருந்தது. இந்த பிரச்சனையெல்லாம் இந்தப் போட்டியிலும் தொடரவே செய்தது. பெங்களூருவிற்கு எதிரான இந்த போட்டியிலும் ருத்துராஜ் சொதப்பவே செய்திருந்தார்.

சென்னை அணிக்கு நல்ல தொடக்கமும் கிடைத்திருக்கவில்லை. பவர்ப்ளேயில் 35 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. முதல் 10 ஓவர்களில் வெறும் 60 ரன்களை மட்டுமே சென்னை எடுத்திருந்தது. இதுவரை சுமாரான ஆட்டத்தையே சென்னை ஆடியிருந்தது. கடந்த போட்டிகளை போன்று சென்னை மொத்தமாக சொதப்பப்போகிறது என்ற மனநிலையிலேயே ரசிகர்கள் இருந்தனர். யாருமே எதிர்பாராத இந்த சமயத்தில் மேஜிக் நிகழத் தொடங்கியது. சிவம் துபேவும் உத்தப்பாவும் ஒரு வெறியாட்டத்தை ஆடத் தொடங்கினர். வனிந்து ஹசரங்கா வீசிய 11 வது ஓவரிலிருந்து அதிரடி தொடங்கியது. முதலில் சிவம் துபேதான் பெரிய ஷாட்களை ஆட ஆரம்பித்தார். வனிந்து ஹசரங்காவின் அந்த ஓவரில் ஒரு சிக்சரையும் ஒரு பவுண்டரியையும் துபே அடித்திருந்தார். துபே அதிரடியை தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே உத்தப்பாவும் அவருடன் கைக்கோர்த்துக்கொண்டார். மேக்ஸ்வெல் வீசிய ஒரே ஓவரில் லெக் சைடில் 3 சிக்சர்களை பறக்கவிட்டார். ஸ்பின்னர்களுக்கு எதிராக மட்டுமில்லை வேகப்பந்து வீச்சாளர்கள்களுக்கு எதிராகவுமே அடித்துதான் ஆடினார். ஆகாஷ் தீப்பின் ஒரே ஓவரில் 24 ரன்கள் அடிக்கப்பட்டது. அந்த கடைசி 10 ஓவர்கள் முழுவதுமே பட்டாசாக இருந்தது.

பெங்களூருவை துவம்சம் செய்த சென்னை.. வெற்றிப்பாதைக்கு திரும்பியது எப்படி? - இந்த ஃபார்ம் தொடருமா? #IPL2022

முதல் 10 ஓவர்களில் ஓவருக்கு 6 ரன்கள் என்ற விகிதத்தில் முன்னேறிக்கொண்டிருந்த சென்னையின் ரன்ரேட், அடுத்த 10 ஓவரில் ஓவருக்கு 15 ரன்களுக்கு மேல் எகிறியது. இதனால் சென்னை அணி 20 ஓவர்களில் 216 ரன்களை எட்டியது. உத்தப்பா 88 ரன்களையும் சிவம் துபே 95 ரன்களையும் அடித்திருந்தனர். இருவரும் இணைந்து 165 ரன்களை எடுத்திருந்தனர். பல ரெக்கார்டுகளை உடைத்த பார்ட்னர்ஷிப்பாக இது அமைந்தது.

ருத்துராஜின் சொதப்பல், சுமாரான தொடக்கம் இவற்றையெல்லாம் ஈடுகட்டும் வகையில் துபே-உத்தப்பா கூட்டணி இப்படி ஒரு ஆட்டம் ஆடியது சென்னையின் வெற்றிக்கு முதல் காரணமாக அமைந்திருந்தது.

இரண்டாவதாக பந்துவீச்சு. பேட்டிங்கில் எப்படி சென்னை அணிக்கு ஒரு நல்ல தொடக்கம் கிடைக்காமல் இத்தனை போட்டிகளாக தடுமாறியதோ, அதே போல்தான் பௌலிங்கிலும் சென்னைக்கு அவ்வளவு சிறப்பான தொடக்கம் கிடைக்கவில்லை. கடந்த 4 போட்டிகளிலும் சேர்த்து சென்னை அண பவர்ப்ளேயில் 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருந்தது. அதிலும் ஒரு விக்கெட் ரன் அவுட்டில் வந்தது. ஒரே விக்கெட் மட்டுமே பவர்ப்ளேயில் வந்திருந்தது. இந்த வீரியமற்ற பௌலிங்கினால் கடந்த 4 போட்டிகளிலுமே சென்னை அணியின் ப்ளேயிங் லெவனில் மாற்றங்கள் இருந்தது. குறிப்பாக, பௌலர்கள் மாறிக்கொண்டே இருந்தனர்.

இந்நிலையில்தான் முதல் முறையாக சென்னை அணி ப்ளேயிங் லெவனில் மாற்றமே இல்லாமல் குறிப்பாக பௌலிங் லைன் அப்பில் மாற்றமே இல்லாமல் இருந்தது. அடிக்கடி மாற்றங்களை செய்யாமல் இருக்கிற பௌலர்களையே நம்புவோம் என்ற முடிவுக்கு சென்னை வந்துவிட்டதாக தெரிகிறது. சென்னையின் அந்த நம்பிக்கையை ஓரளவுக்கு காப்பாற்றும் வகையிலேயே சென்னையின் பௌலர்கள் வீசியிருந்தனர். குறிப்பாக, பவர்ப்ளேயில் மட்டும் சென்னை அணி அட்டகாசமாக வீசி முன்று விக்கெட்டுகளை எடுத்திருந்தது. டூப்ளெஸ்சிஸ், கோலி, அனுஜ் ராவத் என நல்ல ஃபார்மில் இருந்த பெங்களூரு அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் மூவருமே பவர்ப்ளேக்குள்ளேயே காலி. இதுவே சென்னையின் வெற்றிக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

இந்த பவர்ப்ளேயில் மஹீஸ் தீக்சனா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். முகேஷ் சௌத்ரி 1 விக்கெட்டை அதுவும் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். மஹீஸ் தீக்சனா இலங்கையை சேர்ந்த மிஸ்டரி ஸ்பின்னர். பவர்ப்ளே ஸ்பெசலிஸ்ட். பவர்ப்ளே பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவே நன்றாக ஆடியிருந்த ப்ரெட்டோரியஸை பென்ச்சில் உட்கார வைத்துவிட்டு தீக்சனாவை அணிக்குள் கொண்டு வந்தார்கள். அவர் மேல் வைக்கப்பட்ட நம்பிக்கையை காப்பாற்றிக்கொடுத்தார். பவர்ப்ளே மட்டுமில்லை மொத்தமாக 4 விக்கெட்டுகளையும் அசத்தினார். பெங்களூருவிற்கு இந்த அதிர்ச்சிகரமான தொடக்கத்திற்கு பிறகு மற்ற சில பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடினாலும் அந்த விக்கெட் அழுத்தம் அது ஒரு பக்கம் தொடர்ந்து கொண்டே இருந்ததது. இதனால் அந்த அணியால் 193 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

நீண்ட தோல்விகளுக்குப் பிறகு ஒரு கூட்டு முயற்சியால் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. இது தொடர வேண்டும் என்பதே சி.எஸ்.கே ரசிகர்களின் விருப்பம்.

banner

Related Stories

Related Stories