விளையாட்டு

தோல்விக்கு காரணமான மந்தமான பேட்டிங் - விசித்திர இன்னிங்ஸ் ஆடிய ரிஷப் பண்ட்!

நேற்று நடந்த ஐ.பி.எல் போட்டியில் லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தோல்விக்கு காரணமான மந்தமான பேட்டிங் - விசித்திர இன்னிங்ஸ் ஆடிய ரிஷப் பண்ட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் நேற்று நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. டெல்லி அணியின் தோல்விக்கு அந்த அணியின் மந்தமான பேட்டிங் மிக முக்கிய காரணமாக இருந்தது.

டெல்லி அணியே முதலில் பேட்டிங் செய்திருந்தது. ப்ரித்துவி ஷாவும் வார்னரும் ஓப்பனர்களாக இறங்கியிருந்தனர். வார்னரை ஒரு முனையில் நிற்க வைத்துவிட்டு பிரித்திவி ஷா இன்னொரு முனையில் பின்னியெடுத்தார். பவர்ப்ளே முழுவதுமே அதிரடி சரவெடியாக பட்டையை கிளப்பினார். கவர்ஸிலும் பாய்ண்ட்டிலும் தொடர்ச்சியாக ஷாட்களை ஆடி அதகளப்படுத்தினார். இதனால் பவர்ப்ளேயில் டெல்லி அணி விக்கெட்டே இழக்காமல் வலுவான நிலையில் இருந்தது. தொடர்ந்து நன்றாக ஆடிய பிரித்திவி ஷா கிருஷ்ணப்பா கௌதம் வீசிய 8 ஆவது ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார். அவர் அவுட் ஆன போது அணியின் ஸ்கோர் 67. இந்த 67 ரன்களில் 61 ரன்களை பிரித்திவி ஷா மட்டுமே எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 180 ஆக இருந்தது.

பிரித்திவி ஷாவின் அதிரடியால் டெல்லி அணி தொடக்க ஓவர்களில் நல்ல ரன்ரேட்டில் ஸ்கோர் செய்திருந்தது. இந்த சமயத்தில்தான் பிரித்திவி ஷா அவுட் ஆன உடனேயே. அடுத்த 7 ரன்களுக்குள் வார்னர், பவல் என இன்னும் இரண்டு விக்கெட்டுகள் விழுந்தது. 10.3 ஓவர்களில் 74-3 என்ற சூழலில் இருக்கும் போது கேப்டன் ரிஷப் பண்ட்டும் சர்ஃப்ராஷ் கானும் கூட்டணி சேர்ந்தனர். ஒன்றிரண்டு ஓவர்களுக்கு பொறுமையாக ஆடிவிட்டு அதிரடியில் இறங்குவார்கள் என எதிர்பார்த்து காத்திருக்க, அதிரடியை நிகழ்த்தாமலேயே இருவரும் கடைசி வரை நாட் அவுட்டாக இருந்தனர். சர்ஃப்ராஷ் கான் 28 பந்துகளில் 36 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். பண்ட் 36 பந்துகளில் 39 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் வெறும் 108 தான். இவர்களின் மந்தமான ஆட்டத்தால் டெல்லி அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த போதும் 149 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

தோல்விக்கு காரணமான மந்தமான பேட்டிங் - விசித்திர இன்னிங்ஸ் ஆடிய ரிஷப் பண்ட்!

சர்ஃப்ராஷ் கான், ரிஷப் பண்ட் இருவரும் பேட்டை தூக்கினாலே சிக்சருக்கு முயற்சிக்கக்கூடிய வீரர்கள். அப்படியானவர்கள் இவ்வளவு மந்தமாக அதுவும் இவர்களுக்கு பிறகு லலித் யாதவ், அக்சர் படேல், ஷர்துல் தாகூர் நல்ல பேட்டிங் ஆடக்கூடியவர்கள் இருந்தும் சொதப்பியது அதிர்ச்சியே. கிருஷ்ணப்பா கௌதம் கடந்த இரண்டு மூன்று சீசன்களாகவே ஆடாமல் இருக்கும் வீரர். லக்னோ அணியின் 6 வது பௌலிங் ஆப்சன் இவர்தான். இவர் வீசிய ஒரு ஓவரையே பண்ட் மெய்டனாக ஆடியிருந்தார். நிதானமாக ஆடுகிறேன் என்ற பெயரில் எக்கச்சக்கமாக டாட் ஆடியிருந்தனர். 20 ஓவர்களில் டெல்லி அணி மொத்தமாக 48 பந்துகளை டாட் ஆக்கியிருந்தனர். அதாவது 8 ஓவர்களில் ஒரு ரன்னை கூட எடுக்கவில்லை. 7-15 மிடில் ஓவர்களில் மட்டும் 24 டாட்கள். இந்த மிடில் ஓவர்களில்தான் 3 விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 47 ரன்களை மட்டுமே டெல்லி எடுத்திருந்தது.

இந்த மிடில் ஓவர்களில் விட்டதை ரிஷப் பண்டாலும் சர்ஃப்ராஷ் கானாலும் டெத் ஓவரிலும் பிடிக்க முடியவில்லை. கடைசி 3 ஓவர்களில் ஒரே ஒரு பவுண்டரியுடன் 19 ரன்களை மட்டுமேதான் அடித்திருந்தனர். பின்வரிசையில் வீரர்கள் இருந்தும் இப்படி சொதப்பியதுதான் ஏமாற்றமே.

டாஸின் போதே நாங்கல் முதலில் பந்துவீசவே விரும்புகிறோம் என பண்ட் தெரிவித்திருந்தார். காரணம், பனியின் தாக்கம். ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது இரண்டாவது பந்துவீசும் அணியின் பௌலர்களால் அவ்வளவு சிறப்பாக பந்தை பிடித்து வீச முடியாது. அதனால், முதலில் பேட் செய்யும் அணிகள் பௌலர்களின் சௌகரியத்திற்காக எவ்வளவு பெரிய டார்கெட்டை நிர்ணயிக்க முடியுமோ அதை நிர்ணயிக்க வேண்டும். அப்போதுதான் பௌலர்கள் கொஞ்சம் ஆசுவாசமாக வீச முடியும். இதெல்லாம் ரிஷப் பண்ட்டுக்கும் தெரியும். தெரிந்தும் இப்படி ஒரு விசித்திரமான இன்னிங்ஸை ஆடியது ஆச்சர்யம்தான்.

banner

Related Stories

Related Stories