விளையாட்டு

“இந்த குதிரை இன்னும் ஓயவில்லை” - விமர்சனங்களுக்கு பதிலடி : கெத்து காட்டும் தினேஷ் கார்த்திக் !

பெங்களூரு அணிக்காக ஆடும் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் பரபரப்பான கட்டத்தில் அதிரடி ஆட்டம் ஆடி பெங்களூரு அணியை வெல்ல வைத்திருக்கிறார்.

“இந்த குதிரை இன்னும் ஓயவில்லை” - விமர்சனங்களுக்கு பதிலடி : கெத்து காட்டும் தினேஷ் கார்த்திக் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் பெங்களூரு அணிக்காக ஆடும் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் பரபரப்பான கட்டத்தில் அதிரடி ஆட்டம் ஆடி பெங்களூரு அணியை வெல்ல வைத்திருக்கிறார்.

முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 169 ரன்களை எடுத்திருந்தது. கடந்த போட்டியில் சதமடித்து அசத்தியிருந்த பட்லர் இந்த போட்டியிலும் அதே ஃபார்மை தொடர்ந்திருந்தார். 70 ரன்களை அடித்து அணிக்கு உறுதுணையாக இருந்தார். இவரோடு ஹெட்மயரும் 42 ரன்களை அடித்திருந்தார்.

பெங்களூரு அணிக்கு 170 ரன்கள் இலக்கு. அந்த அணியின் தொடக்கம் ரொம்பவே நன்றாக இருந்தது. பவர்ப்ளேயில் மட்டும் 55 ரன்களை எடுத்து டார்கெட்டை நோக்கி வேக வேகமாக முன்னேறியிருந்தனர். ஆனால், திடீரென ஒரு சரிவு ஏற்பட்டது. 7,8,9 இந்த மூன்று ஓவர்களில் மட்டும் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. குறிப்பாக, சஹால் வீசிய இரண்டு ஓவர்களில் டூப்ளெஸ்சிஸ், கோலி, வில்லி என மூன்று முக்கியமான விக்கெட்டுகள் வீழ்ந்தது.ரூதர்போர்டும் ஷபாஷ் அகமதுவும் இந்த சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினாலும் அவர்களாலும் முழுமையாக அந்த பணியை செய்து முடிக்க முடியவில்லை.

இந்த சமயத்தில்தான் 13 வது ஓவரில் நம்பர் 7 இல் தினேஷ் கார்த்திக் இறங்கியிருந்தார். அவர் க்ரீஸுக்குள் வந்த சமயத்தில் பெங்களூரு அணிக்கு கடைசி 7 ஓவர்களில் 86 ரன்கள் தேவைப்பட்டது. தினேஷ் கார்த்திக் உள்ளே வந்து அடுத்த இரண்டு ஓவர்களிலேயே நிலைமையை தலைகீழாக மாற்றினார். அஷ்வின் வீசுய ஒரே ஓவரில் மட்டும் 21 ரன்களை அடித்திருந்தார். வழக்கமாக ஸ்பின்னர்களுக்கு எதிராக திணறும் தினேஷ் கார்த்திக் இங்கே சக தமிழக வீரர்தான் என்பதால் அஷ்வினுக்கு எதிராக துணிச்சலாக இறங்கி அடித்திருந்தார். சிக்சர்களும் பவுண்டரிகளும் பறந்திருந்தது. அடுத்து சைனி வீசிய 15 வது ஓவரிலும் 16 ரன்கள் வந்திருந்தது. ஆக, இந்த 2 ஓவர்களில் மட்டும் 37 ரன்கள். ஆட்டமே தலைகீழாக மாறிப்போனது. கடைசி 5 ஓவர்களில் 49 ரன்களை மட்டுமே எடுக்க வேண்டிய சூழலில் பெங்களூரு எளிதில் வென்றது. ஷபாஷ் அகமதுவும் அதிரடியாக ஆடியிருந்தார். தினேஷ் கார்த்திக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 23 பந்துகளில் 44 ரன்களை எடுத்திருந்தார்.

இந்த போட்டி என்றில்லை. இதுவரை ஆடியிருக்கும் 3 போட்டிகளிலுமே தினேஷ் கார்த்திக் மிகச்சிறப்பாக ஆட்டத்தை முடித்து கொடுத்திருக்கிறார். பஞ்சாபுக்கு எதிரான முதல் போட்டியில் 14 பந்துகளில் 32 ரன்களையும் கொல்கத்தாவிற்கு எதிரான கடந்த போட்டியில் 7 பந்துகளில் 14 ரன்களையும் எடுத்திருந்தார். தினேஷ் கார்த்திக்கை அவருக்கு ரொம்பவே சௌகரியமான ஃபினிஷர் ரோலில் தொடர்ந்து பெங்களூரு அணி ஆட வைத்துக் கொண்டிருக்கிறது. மற்ற அணிகளில் தினேஷ் கார்த்திக்கிற்கு இந்த மாதிரி முழுமையாக நம்பி வழங்கப்பட்ட ஃபினிஷர் ரோல்கள் கிடைத்திருக்கவே இல்லை. ஆனால், இங்கே பெங்களூருவில் தினேஷ் கார்த்திக் டெத் ஓவரில் ஃபினிஷராக மட்டுமே இறங்குவதை அந்த அணி உறுதி செய்து கொடுத்திருக்கிறது.

கடந்த ஆண்டில் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது தினேஷ் கார்த்திக் அந்த தொடரில் கமெண்ட்ரி செய்து கொண்டிருந்தார். தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது. அவர் கிரிக்கெட்டை விட்டு ஒதுங்க தயாராகிவிட்டார் என அப்போது பேசப்பட்டது. ஆனால், தினேஷ் கார்த்திக்கின் இந்த அதிரடிகளை பார்க்கும் போது ஒன்றே ஒன்றுதான் தோன்றுகிறது. இந்த குதிரை இன்னும் ஓயவில்லை!

banner

Related Stories

Related Stories