விளையாட்டு

5 ஓவர்களில் மாறிய ஆட்டம்.. பொல்லார்டை அலறவிட்ட அந்த இரண்டு ஓவர்கள்!

இரண்டு ஓவர்களுக்காக இந்த இரண்டு பௌலர்களுக்குமே பாராட்டு மேல் பாராட்டு குவிந்து வருகிறது. அப்படி அந்த ஓவர்களில் என்னதான் செய்தார்கள்? பொல்லார்டை எப்படி கட்டுப்படுத்தினார்கள்?

5 ஓவர்களில் மாறிய ஆட்டம்.. பொல்லார்டை அலறவிட்ட அந்த இரண்டு ஓவர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடந்து முடிந்திருக்கிறது. அந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்த போட்டி கடைசி ஓவர் வரை பரபரப்பாக சென்றது. அதிரடி வீரரான பொல்லார்டை க்ரீஸுக்குள் வைத்துக் கொண்டே ஸ்கோரை டிஃபண்ட் செய்து ராஜஸ்தான் வென்றிருப்பது ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, 19 மற்றும் 20 வது ஓவர்களை பிரசித் கிருஷ்ணா மற்றும் நவ்தீப் சைனி இருவருவருமே அட்டகாசமாக பொல்லார்டை பெரியளவில் அதிரடி காட்டவிடாமல் தடுத்திருந்தனர். இந்த இரண்டு ஓவர்களுக்காக இந்த இரண்டு பௌலர்களுக்குமே பாராட்டு மேல் பாராட்டு குவிந்து வருகிறது. அப்படி அந்த ஓவர்களில் என்னதான் செய்தார்கள்? பொல்லார்டை எப்படி கட்டுப்படுத்தினார்கள்?

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியே முதலில் பேட் செய்திருந்தது. அந்த அணி 193 ரன்களை எடுத்திருந்தது. பட்லர் சதமடித்திருந்தார். மும்பைக்கு டார்கெட் 194. சேஸிங்கின் போது 15 வது ஓவர் வரை ஆட்டம் சமமாகவே சென்று கொண்டிருந்தது. ஏனெனில், ராஜஸ்தான் பேட்டிங்கின் போது பவர்ப்ளேயில் 48-2 என்ற ஸ்கோரை எடுத்திருந்தது. அதே பவர்ப்ளேயில் மும்பை 50-2 என்ற ஸ்கோரை எடுத்திருந்தது. அடுத்தக்கட்டத்தில் 7-15 ஓவர்களில் ராஜஸ்தான் 90-1 என்ற ஸ்கோரை எடுக்க மும்பை 86-2 என்ற ஸ்கோரை எடுத்தது. ஆக, 15 வது ஓவர் வரை இரண்டு அணிகளுமே ஏறக்குறைய ஒரே மாதிரியாகவே ஸ்கோர் செய்திருந்தனர். யார் வேண்டுமானாலும் வெல்லலாம் எனும் சூழலே இருந்தது. கடைசி 5 ஓவர்களில்தான் ஆட்டம் மாறி ராஜஸ்தான் பக்கமாக திரும்பியது. அதுவும் பொல்லார்ட் க்ரீஸில் இருக்கும்போதே!

பொல்லார்டை பொறுத்தவரைக்கும் அவர் பேட்டை தூக்கினாலே சிக்சர்தான். 2018 முதல் 16-20 ஓவர்களில் 188 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியிருக்கிறார். மும்பையை பொறுத்தவரைக்கும் இந்த போட்டியில் கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. ஓவருக்கு 12 ரன்கள் மட்டுமே. கொஞ்சம் சவாலானதாக இருந்தாலும் இது டி20 போட்டிகளில் எட்டிவிடக்கூடிய டார்கெட்தான். அதுவும் பொல்லார்ட் மாதிரியான ஒரு வீரர் இருக்கும்போது இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. ஆனால், ராஜஸ்தானின் பௌலர்கள் அதை பெரிய விஷயமாக்கினர். பொல்லார்டை திணறடித்தனர். குறிப்பாக, நவ்தீப் சைனியும் பிரசித் கிருஷ்ணாவும் கடைசி 2 ஓவர்களில் பொல்லார்டுக்கு எப்படி பந்துவீச வேண்டும் என்பதை காட்டிவிட்டு சென்றனர்.

இந்த போட்டியில் பொல்லார்ட் 8 வது பந்தில்தான் முதல் ரன்னையே எடுத்திருந்தார். மேலும், சஹால் வீசிய 16 வது ஓவரில் அதிரடி வீரர்களான டிம் டேவிட் மற்றும் டேனியல் சாம்ஸ் இருவருமே அடுத்தடுத்து அவுட் ஆகியிருந்தனர். இதெல்லாம் பொல்லார்டுக்கு கொஞ்சம் அழுத்தத்தை கொடுத்தது. இருந்தாலும் ட்ரெண்ட் போல்ட் வீசிய ஓவரில் ஒரு சிக்சரையும் ஒரு பவுண்டரியையும் அடித்து ராஜஸ்தானை பதற வைத்திருந்தார். இதன்பிறகுதான் போட்டி கடைசி இரண்டு ஓவர்களுக்குள் சென்றது. அந்த இரண்டு ஓவர்களில் மும்பையின் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது. இதேமாதிரியான சூழலில் பொல்லார்ட் பல போட்டிகளை வென்று கொடுத்திருக்கிறார். ஆனால், இங்கே அவரால் போட்டியை நெருக்கமாக கூட கொண்டு வர முடியவில்லை.

பிரசித் கிருஷ்ணா வீசிய 19 வது ஓவரில் வெறும் 10 ரன்கள் மட்டுமே வந்திருந்தது. அதிலும் மூன்று ஒயிடுகள் மற்றும் ஒரு நோ-பாலும் அடக்கம். அதை தாண்டி பொல்லார்டால் ஒரே ஒரு பவுண்டரியை மட்டுமே இந்த ஓவரில் அடிக்க முடிந்தருந்தது. பிரசித் கிருஷ்ணா இந்த ஓவரில் அப்படி என்னதான் மாயம் செய்தார்?

எக்ஸ்ட்ராசோடு சேர்த்து இந்த ஓவரில் பிரசித் கிருஷ்ணா 10 பந்துகளை வீசியிருந்தார். இந்த 10 பந்துகளில் பெரும்பாலான பந்துகள் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே நன்றாக ஒயிடாக வீசப்பட்டவை. ஒவ்வொரு பந்திலுமே வேகத்தை மாற்றி மாற்றி வீசியிருந்தார்.

பிரசித் கிருஷ்ணா வீசிய பத்து பந்துகளின் வேகங்கள் கீழே

1. 122.6 கி.மீ/மணி

2. 95.8

3. 135.1

4. 136.7

5. 143

6. 107.4

7. 137

8. 136

9. 108.9

10. 111.9

95 கி.மீ வேகத்தில் ஸ்பின்னர் போல வீசிவிட்டு அடுத்த பந்திலேயே 135+ கி.மீ வேகத்தில் வீசியிருக்கிறார். அதே மாதிரி 140+ கி.மீ வேகத்தில் வீசிவிட்டு உடனே 107 க்கு கீழிறங்கியிருக்கிறார். ஒவ்வொரு பந்துக்கும் இடையிலான வேக மாற்றமும் அந்த ஒயிடு லைனும் பொல்லார்ட் எதிர்கொள்ள முடியாத அளவுக்கு அபாயமாக இருந்தது. ஒயிடாக மட்டுமில்லாமல் இடையிடையே ஸ்டம்ப் லைனிலும், ஷார்ட் பிட்ச்சாகவும் வீசியும் சர்ப்ரைஸ் கொடுத்தார். இவையெதையுமே பொல்லார்டால் எதிர்கொள்ளவே முடியவில்லை. இத்தனைக்கும் இந்த ஓவரில் பொல்லார்டின் லெக் சைடு பவுண்டரியை விட ஆஃப் சைடு பவுண்டரி குறைவான தூரத்திலேயே இருந்தது. ஆஃப் சைடில் டீப் பாயிண்ட்டில் மட்டுமே ஃபீல்டர் இருந்தார். 18.4 வது ஓவரில் ஒரு பெரிய சிக்சருக்கு முயல்கிறேன் என பொல்லார்ட் தூக்கி அடித்த போதும் அந்த குறைவான ஆஃப் சைடை கூட பொல்லார்டால் கிளியர் செய்ய முடியவில்லை. அந்த பந்து யாஷஸ்வி ஜெய்ஸ்வாலின் கைகளுக்குள் புகுந்தது. ஆனால், அதை அவர் ட்ராப் செய்திருந்தார்.

இப்படியாக 19 வது ஓவர் முடிய 20 வது ஓவரில் மும்பையின் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. பொல்லார்டால் இதையும் கூட அடிக்க முடியும். ஒருவேளை அடிக்க முடியாமல் போனாலும் ஓரளவுக்கு நெருக்கமாக கொண்டு வந்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுவும் நடக்கவில்லை. இந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே வந்திருந்தது. நவ்தீப் சைனி வீசிய 20 வது ஓவரிலும் அதே ஒயிடு லைன் தான் ப்ளான். ஆனால், பிரசித் கிருஷ்ணா வீசியதை போல வேகத்தை மாற்றி சைனி வீசவில்லை. ஒவ்வொரு பந்தையுமே 140+ வேகத்தில் நறுக்கென இறக்கியிருந்தார். இதையும் பொல்லார்டால் எதிர்கொள்ள முடியவில்லை. இந்த ஓவரிலும் எக்ஸ்ட்ரா கவரில் மட்டும் ஒரு பவுண்டரி அடித்தார். அவ்வளவுதான். கடைசி பந்தில் ஒரு லோ ஃபுல் டாஸில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். நவ்தீப் சைனி டெத் ஓவர்களில் சராசரியாக 9 ரன்களுக்கு மேல் கொடுக்கக்கூடியவர். ஆனால், இங்கே பொல்லார்ட் ஆடியும் 5 ரன்கள்தான் வந்திருந்தது. போக அவரின் விக்கெட்டையும் சைனி வீழ்த்திவிட்டார். பொல்லார்ட் 24 பந்துகளில் 22 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 91 மட்டுமே.

188 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி போட்டியை மாற்றக்கூடிய பொல்லார்டை க்ரீஸுக்குள் வைத்துக் கொண்டு அவரை Run a Ball இல் கூட ஸ்கோர் செய்ய விடாமல் அடக்கிய சைனி மற்றும் பிரசித் கிருஷ்ணாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories